இலங்கைத் தீவின் பூர்வீக குடிகளாக சிங்களவர்களையும் மற்றும் தமிழர்களையும் அவர் தம் பேரினவாத சிந்தனையானது, பல வரலாற்று புனைவுகளின் ஊடாக இற்றை வரை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் இந்நாட்டின் பூர்வீகக் குடிகள் வேடுவர் என்பதை எவரும் மறுக்கவியலாது. அதனடிப்படையில், கிழக்குக் கரையோரம் எங்கும் வாழும் இன்று தமிழை பேசு மொழியாகக் கொண்டுள்ள வேடுவர்களின் இருப்பியல் பற்றியும், அவர் தம் தேவை பற்றியும் ‘வேடர் மானிடவியல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் ஆய்வுப்பாங்கில் விவரிக்கின்றது. வேடுவர்களுக்கே உரித்தான அடையாளங்களை வெளிக்கொணர்வதாகவும், இதுவரை நாம் அறிந்திடாத வேடுவர் குணமாக்கல் சடங்குகள், இயற்கையுடன் பின்னிப்பிணைந்த அவர்களின் வாழ்வியல், வேடுவர் மீதான ஆதிக்க சாதியினரின் பாகுபாடுகள் என்பன உள்ளிருந்து மரபு மீட்கும் நோக்கில் பிரதானமாகக் கண்டறியப்பட்டு, அவை தொடரின் ஊடாக முன்வைக்கப்படுகின்றன. அத்துடன் காலனிய எண்ண மேலாதிக்கத்துள் சிக்குண்டு அழிந்துகொண்டிருக்கும், அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அவர் தம் மானுட நகர்வுகள் முதலான பல அல்லோல கல்லோல நிலைமைகளும் இதில் விரிவாகப் பேசப்படுகின்றன.
கிழக்கிலங்கை களுவன்கேணி வேடர்களை மையப்படுத்திய பார்வை
கரையோர வேடர்கள் எனப்படுவோர் கிழக்கிலங்கையின் தமிழ் பேசும் சமூகத்தின் ஒரு பிரிவினர் ஆவர். இவர்கள் இலங்கை வேடர்களினதும், இலங்கைத் தமிழர்களினதும் வழித்தோன்றல்களாகக் காணப்படுகின்றனர். அதே சமயம் இன்றைய சூழலில் இவர்களில் தூய (கலப்பற்ற) வேடர்களைக் காண்பது அரிதாகவே உள்ளது. வலிந்து ஏற்படுத்தப்பட்ட குடியேற்றத் திட்டங்கள் மற்றும் புவியியல் மாறுதல்களின் விளைவாக ஏனைய சமூகங்களுடன் வாழ்வியல் முறைகள் மற்றும் மரபு ரீதியில் கலப்புற்றவர்களாக இவர்கள் காணப்படுகின்றனர். கிழக்குக் கரையோர வேடர்களின் வழிபாட்டு முறையாக மூதாதையர் (உத்தியாக்கள்) வழிபாடே பிரதானமாகக் காணப்படுகின்றது. பின்னைய காலங்களில் பல தெய்வங்கள் இடைச்செருகியுள்ளன.
இவர்களுக்கென்று தனி மொழி காணப்பட்டாலும் இன்றைய சூழலில் அது பெருவழக்கில் இல்லை. இவர்களின் வழிபாட்டின் போதே தமது மொழியினைப் பேசுகின்றனர். கிழக்கிலங்கையிலே இவர்கள் பாட்டாளிபுரம், மாங்கேணி, காயாங்கேணி, பனிச்சங்கேணி, மதுரங்குளம், கிரிமிச்சை, உரியங்கட்டு, கதிரவெளி, கட்டுமுறிவு, அமந்தனாவளி, வாகரை, புன்னைக்கிழங்கு, குஞ்சன்குளம், மட்டக்களப்பு (முகத்துவாரம்), வேடர் குடியிருப்பு (குடியிருப்பு), தளவாய், களுவன்கேணி, சித்தாண்டி, கிரான், சந்திவெளி, வாழைச்சேனை, நாசிவன் தீவு, இறால் ஓடை, பொண்டுகல்சேனை, கோங்கனை, பால்சேனை, திராய்மடு, வாகனேரி, முறுத்தானை, பழுகாமம், கொக்கட்டிச்சோலை ஆகிய இடங்களில் கலப்புற்றும், கலப்புறாமலும் வாழ்ந்து வருகின்றனர்.
சடங்கார்ந்த நடவடிக்கைகள் கொடுக்கின்ற ஆரோக்கிய உளவிடுபடு நிலைகள் என்பன வேறெந்த விடயப்பொருட்களினாலும் ஏற்படுத்த முடியாத வினை நடவடிக்கையாகும். பல வகையான சடங்காசாரங்கள் கிழக்கிலங்கையினைப் பொறுத்தமட்டில் காணப்பட்டாலும் வேடர்களின் வழிபாட்டு முறைகளில் காணப்படுகின்ற குணமாக்கல் தன்மைகளினை ஆராய முற்பட்டதற்கான காரணங்களில் மிக முக்கியமானது, இவர்களிடம் காணப்பட்ட சில தனித்துவமான பண்புக்காரணிகளே ஆகும். அதாவது இவர்களினை விட மிக ஆடம்பரமாக, பகட்டாக, அநேகர் பங்குகொள்கின்ற சடங்கு ஆற்றுகைகள் காணப்பட்டாலும், அவர்களிடம் மிகமோசமான சாதியப்பாகுபாடு, மற்ற மனிதர்களை கேவலமாக நடாத்தும் தன்மைகள், தேவையற்ற ஆடம்பரம் முதலான தாழ்வுச்சிக்கல்கள் அபரிமிதமாகக் காணப்படுகின்றன. ஆனால் வேடர் வழிபாட்டில் இப்பிறழ் பண்புகளினை அறவே காணமுடியாது. அவ்வகையான தன்மைகளுடன் முகிழ்ந்திருக்கும் பின்வரும் சடங்கார்ந்த குணமாக்கல் செயற்பாடுகள் பற்றி நோக்குவோம்.
இலங்கையின் வேடர்கள் மற்றும் அவர் தம் வழக்காறுகள் பற்றி இதுவரைக்கும் பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் முதலாவதாக செலிக்மனின் The Veddas, க. தா. செல்வராசகோபாலினால் எழுதப்பட்ட யாரிந்த வேடர், பேரா. மௌனகுருவின் மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள், காலிங்க டியூடர் சில்வாவின் People Of Srilanka, கணநாத் ஒபயசேகரவின் ‘எல்லா வேடர்களும் எங்கு சென்று விட்டனர்?’, இ. நிசாந்தினியின் ‘மட்டக்களப்பில் வேடர் சமூகம்’ முதலானவற்றைக் குறிப்பிடலாம். மேற்கண்ட ஆய்வுகள் யாவும் வேடர் சமூகத்தவர்களின் மரபுசார் வழக்காறுகளைச் சொல்லியிருந்தாலும் அவர்களின் வழிபாடுகளில் காணப்படுகின்ற குணமாக்கல் மற்றும் ஆற்றுப்படுத்தல் நற்திற விளைவுகளைக் காரண காரியத் தன்மையுடன் உள்ளிருந்து விவரிக்கத் தவறியுள்ளன எனலாம். இதன் விளைவாகவே இவ்வாய்வு, வேட்டுவச் சடங்காற்றுகையின் குணமாக்கல் தன்மைகளையும் அதன் இன்றைய தேவைகளையும் பற்றி ஆராய முற்படுகிறது.
களுவன்கேணி கிராமத்தில் வேடுவர்கள்
களுவன்கேணிக் கிராமம் நீண்ட கால வரலாற்றைக் கொண்ட கிராமமாகும். இதற்கு இக்கிராமத்தின் பெயரே முதற் சான்றாகும். இக்கிராமத்தின் ஆதிக்குடிகள் வேடுவர்கள் தான் என்பதில் எதுவித ஐயமும் இல்லாத போதும், இவர்கள் எக்காலப்பகுதியில் இருந்து இங்கு வாழ்ந்து வருகின்றார்கள் என்பதைத் திட்டவட்டமாக அறிய முடியவில்லை. இவர்களின் தனித்துவமான வழக்காறுகள், பெயர்கள் மற்றும் முதியவர்கள் தரும் தகவல்களின் படி அந்நியராட்சி, அதற்கு முன் மன்னராட்சி என்பன ஏற்படுவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இவர்கள் இங்கு வாழ்ந்து வருகிறார்கள் என்பதை அறிய முடிகின்றது.
பழங்காலத்தில் களுவன்கேணி கிராமமானது கரையோரமாக மட்டக்களப்பு திராய்மடு தொடக்கம் வாகரை வரையும், தெற்கே சித்தாண்டியை அண்மித்துள்ளதும் வேடுவர்களால் செல்லாபத்து என அழைக்கப்பட்ட மோட்டுக் காட்டுப்பிரதேசம் அடங்கலாக பரந்த ஒரு நிலப்பரப்பைக் கொண்டதாக அமைந்திருக்கின்றது. இதற்குச் சான்றாக வேடுவர்களால் அழைக்கப்பட்டு வழக்கொழிந்து போன இடப்பெயர்கள் உள்ளன. அந்த இடங்கள் பற்றிய விபரம் வருமாறு. செல்லாபத்து – சித்தாண்டி பேரிலாவெளியை அண்டிய பகுதி, கல்குடா முதல் கல்மடு உட்பட்ட பகுதி (கல்கோடா), சவுக்கடி (கிரிமட்டி), தளவாய் குடியிருப்பு பகுதி, திருக்காகணி-திராய்மடு, கருவப்பங்கேணிப் பகுதி, ஆக்கமது – வாகரைப் பகுதி . ஆனால் அண்மைக் கால களுவன்கேணிக் கிராமமானது வெறும் நான்கு கிலோ மீற்றருக்குள் சுருங்கியுள்ளது.
களுவன்கேணி வேடுவர்களின் வழிபாட்டு முறைகள்
ஆரம்ப காலங்களைப் போன்று இன்றைய சூழலில் களுவன்கேணி வேடர்களின் வழிபாட்டு நடைமுறைகள் காணப்படவில்லை என்பதை தற்காலத்தில் வேடுவ வழிபாட்டில் ஈடுபடுபவர்களிடம் திரட்டிய தகவல்கள் மூலம் நன்கறிந்து கொள்ள முடிந்தது. கால மாறுதல்கள், சமூகக் கலப்புகள் மற்றும் பண்பாடு ரீதியான மானிடவியல் தாக்கங்களின் விளைவாக இவை நடந்தேறியுள்ளன எனலாம். எனினும் அவர்களுடைய வழிபாட்டின் வீரியமும், அது சார்ந்த நம்பிக்கை செயல் விளைவுகளும், அதனால் ஏற்படுத்தப் படுகின்ற நோய்நீக்கல் நிலைமைகள் மற்றும் குணமாக்கல் செயற்பாடுகள் என்பனவும் இன்றும் மேம்போக்கான ஆரோக்கியத் தன்மையுடன் காணப்படுகின்றமையும் கவனிக்கத்தக்கதே.
தற்காலத்தில் வேடர் சமூக மரபில் வந்து, தமது மூதாவிகளினால் கற்றுக்கொடுக்கப்பட்ட வேடுவ வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி வருடா வருடம் சடங்கு வழிபாடுகளினைச் செய்து வருகின்ற வெ.கிட்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) என்னும் வேடுவ மதகுரு ஒருவர் தனது வழிபாட்டின் ஆரம்ப காலத்தினை இவ்வாறு கூறுகின்றார். “ஆரம்பத்துல இதுக்கு முதல் இதுகல ஆதரிச்சு (வழிபட்டு) வந்தது முடமாரியர் தான். அவருக்கு முதல் அவங்கட அப்பாவங்க ஆதரிச்சிது வந்த. அதுக்கு பின்னுக்கு அம்மாட தமையன் (அண்ணன்) கந்தன் எண்டவர் செய்து வந்தவர். புறகு அதோட சேந்த ஆட்கள் எல்லாரையும் இந்த தெய்வங்கள் எல்லாம் எடுத்துத்து. (இறந்து விட்டனர்) அதோட அந்த கோயிலடி மங்கிப்பொயித்து. அதுக்குப் புறகு எனக்கு ஒரு கண் வருத்தம் வந்தது. அதோட தான் இந்த தெய்வங்கள் எல்லாம் என்னுல வந்தது. அதுல வந்தது தான் நான் இப்ப வைச்சிரிக்கிற வேட கலைக்குள்ள வாற பத்தினி அம்மன். (பத்தினி தெய்யோ) எங்களுக்கு எல்லாத்துக்கும் முதல் குடல் புரி அம்மாதான் இதுகல ஆதரிச்சு வந்தவ. அவ களுவர், பனிக்கர் ஆக்களுக்குப் புறகு வந்தவ.” இது அவருடைய வழிபாட்டு முறைகளைப் பற்றிய பதிவாகும்.
இவர்களின் இன்றைய கால வழிபாட்டு முறைகளில் உத்தியாக்கள், மா தெடுத்தன், பாலைக்கா தெவுத்தன், குருணாகல தெவுத்தன், கடல் பகுதித்தெய்வம், குடா நீலி, மாதெலிக்காயே, வட்ட முகரி, கப்பல் தெய்வம், குறுமுந்தன, மாறா தெய்வம், கரை தெய்யா, கிரி அம்மா, பத்தினி தெய்யோ, குமாரர், கன்னிமார், கரடித்தெய்வம், பின்னைய கால இடைச்சேர்கைகளாக வந்து கெங்கை காளி, கெங்கை வைரவர், சுடலை வைரவர், மயானருத்ரர், காட்டேரி, சுடலைமாடன் முதலான தெய்வங்களுக்கான வணக்க முறைகளும், வழிபாட்டு ஆசாரங்களுமே காணப்படுகின்றன. இவ்வாறு பல வணக்க முறைகள் காணப்பட்டாலும் உத்தியாக்கள் மற்றும் குமாரர் வழிபாட்;டு முறைகளில் காணப்படுகின்ற குணமாக்கல் விளைவுகள் பற்றிப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தொடரும்…
கமலநாதன் பத்திநாதன்
வேட்டுவச் சடங்காற்றுகையின் குணமாக்கல்- பகுதி I
வேட்டுவச் சடங்காற்றுகையின் குணமாக்கல்- பகுதி II
வேட்டுவச் சடங்காற்றுகையின் குணமாக்கல்- பகுதி III
வேட்டுவச் சடங்காற்றுகையின் குணமாக்கல்- பகுதி IV