இலங்கைத் தீவின் பூர்வீக குடிகளாக சிங்களவர்களையும் மற்றும் தமிழர்களையும் அவர் தம் பேரினவாத சிந்தனையானது, பல வரலாற்று புனைவுகளின் ஊடாக இற்றை வரை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் இந்நாட்டின் பூர்வீகக் குடிகள் வேடுவர் என்பதை எவரும் மறுக்கவியலாது. அதனடிப்படையில், கிழக்குக் கரையோரம் எங்கும் வாழும் இன்று தமிழை பேசு மொழியாகக் கொண்டுள்ள வேடுவர்களின் இருப்பியல் பற்றியும், அவர் தம் தேவை பற்றியும் ‘வேடர் மானிடவியல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் ஆய்வுப்பாங்கில் விவரிக்கின்றது. வேடுவர்களுக்கே உரித்தான அடையாளங்களை வெளிக்கொணர்வதாகவும், இதுவரை நாம் அறிந்திடாத வேடுவர் குணமாக்கல் சடங்குகள், இயற்கையுடன் பின்னிப்பிணைந்த அவர்களின் வாழ்வியல், வேடுவர் மீதான ஆதிக்க சாதியினரின் பாகுபாடுகள் என்பன உள்ளிருந்து மரபு மீட்கும் நோக்கில் பிரதானமாகக் கண்டறியப்பட்டு, அவை தொடரின் ஊடாக முன்வைக்கப்படுகின்றன. அத்துடன் காலனிய எண்ண மேலாதிக்கத்துள் சிக்குண்டு அழிந்துகொண்டிருக்கும், அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அவர் தம் மானுட நகர்வுகள் முதலான பல அல்லோல கல்லோல நிலைமைகளும் இதில் விரிவாகப் பேசப்படுகின்றன.
குணமாக்கல்
இன்றைய காலகட்ட நடைமுறைச் சூழலானது மனிதருட்பட உலகின் அனைத்துக் கூறுகளினையும் இயல்பிறந்த இயைபற்ற தன்மையுள் சிக்கித் தவிக்க விட்டுக் கொண்டே இருக்கின்றது. இதனை மறுப்பதற்கு எவராலும் முடியாது, காரணம் வெள்ளம் கடந்து விட்ட பின் அணை கட்டுதல் சாத்தியமற்றதல்லவா. இவ்வாறான போக்குகள் மலிந்து விட்ட இவ்வுலகியல் போக்கிலே மனிதரையும், மனித மனங்களையும் ஓரளவாவது மீட்டெடுக்கும் செயற்பாட்டுத் திறனைக் கொண்டதாகவே குணமாக்கல் கலை என்பது நடைமுறையில் கொள்ளப்பட்டு வருகின்றது. இங்கு நாம் காணப்போகின்ற குணமாக்கல் என்பதனை நாம் சரியான புரிதலில் விளங்கிக் கொள்ள வேண்டிய தேவையுண்டு. குணமாக்கல் என்றால் நோய்வாய்ப்பட்ட நபரொருவர், தான் பெற்றுக்கொண்ட சிகிச்சை காரணமாக நல்ல நிலைக்குத் தேறி வந்துவிடுதல் மட்டுமல்ல. அது ஒருவகையான மாத்திரைகளுடன் சம்பந்தப்பட்ட குணங்குறிகளின் மாற்றத்துடன் கூடிய குணமாக்கல் தன்மையும், புரிதலும் ஆகும். ஆனால் இங்கு நாம் பார்க்கப் போகின்ற குணமாக்கல் என்பது மனித மனதுள் புதைந்து கிடக்கின்ற உளநெருக்குதல் விளைவுகளில் இருந்து விடுபடும் நிலையைக் கொடுக்கின்ற குணமாக்கல் தன்மையும் செயற்பாடுகளும் ஆகும். இவ்வாய்வில் பெருவாரியாக சடங்காற்றுகைகளில் காணப்படுகின்ற குணமாக்கல் தன்மைகளும் விளைவுகளும் தான் விவரிக்கப்படுகின்றன.
குணமாக்கல் என்பது ஒரு மீட்புக்குச் சமனான விடயமாகும். உளப்பாதிப்புற்ற ஒருவரை அவரது முன்னைய தொழிற்பாட்டு நிலைக்கு சகல வழிகளிலும் இட்டுச் செல்ல வைக்கும் நடைமுறைகளுக்கு வழிவகுப்பதாக அமைகின்ற மீட்புச் செயன்முறையினையே நாம் குணமாக்கல் என்கின்றோம். பாதிக்கப்பட்ட நபர்களினை ஒரு இயல்பான தொழிற்பாட்டு நிலைக்குச் செயற்பட ஆளாக்கி, அவர்களின் தொழிற்பாட்டுத் திறனை மேம்படுத்தி, அவர்களினை சமூகத்திற்கு உபயோகம் உடையவர்களாக மாற்றும் நடவடிக்கைகளினை பொதுவில் குணமாக்கல் செயன்முறை என்பர். இச் செயற்பாடானது ஒவ்வொரு தரப்பிலும் ஒவ்வொரு விதமாகக் காணப்படுகின்றது. குணமாக்கலானது நம்பிக்கை, பாதுகாப்பு, அமைதி, செயற்பாட்டுத்திறன், மகிழ்வு போன்ற உணர்வுகளைப் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மிகையாகக் கொடுக்கின்றது எனலாம்.
பிணியானது (உடல், உளம் சார்ந்த) நபரொருவரின் சிந்தனைச் செயற்பாட்டினைப் பாதிக்கும் போது அவரின் நடத்தை சார் தொழிற்பாடுகள் அனைத்தும் பாதிப்படைவதோடு. சமூகத்தில் அவருக்கான வெளியும் குறைவடைந்து விடுகின்றது. ஒருவர் தான் வாழும் சூழலிலே பதற்றமான, பயங்கரமான, பயந்த சூழ்நிலைகளுக்கு ஆட்கொள்ளப்படுகின்ற போது அவர் அவ்வாறான வெளிப்பாடுகளினையே தான் சார்ந்த சூழலில் தன்னூடாக வெளிக்காட்ட முனைகின்றார். இவ்வாறானவர்கள் வெளியில் செல்லாதிருத்தல், எதற்கும் பயப்பிடும் தன்மையுடன் காணப்படல்,பிறருடன் முரண்படல் தன்னைத் தாழ்வாக அல்லது உயர்வாக எண்ணல் போன்ற எதிர்வினைகளை ஆற்றுவோராகக் காணப்படுவர். இதற்கு ஒவ்வொரு தனிமனிதருள்ளும் காணப்படுகின்ற மனஅழுத்தமே காரணமாகின்றது. இவ்வாறான பாதிப்புக்கு உள்ளானவர்களை மீட்கும் செயன்முறைகளையே குணமாக்கல் செயன்முறைகளானது செய்கின்றன.
இவ்வாறான குணமாக்கல் செய்முறையினை நடைமுறைப்படுத்துவதற்கு குணமாக்கல் உறவுமுறை என்பது மிக முக்கியமான விடயமாகும். அவ்வாறான உறவுமுறையானது சமூக உறவுகள் மூலமோ அல்லது வேறு வழிவகைகளில் இருந்தோ கிடைக்கப் பெறலாம். எமது மக்கள் ஆரம்ப காலங்களில் தம்மைத் தாமே ஆடல் பாடல்கள், சடங்குகள் மூலம் ஒவ்வொரு உள நெருக்குதல்களில் இருந்தும் குணப்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனால் பின்னைய காலங்களில் வந்த மேலைத்தேய சிந்தனைகட்கு ஆட்பட்டு ஒவ்வொரு விடயங்களினையும் இயக்கும் அல்லது மேலாண்மை செய்யும் தன்மை கொண்டவர்களாக, ஒவ்வொன்றையும் கோட்பாட்டுக்குள் விளங்க முற்படுபவர்களாக மாறிவிட்டனர். ஆனால் ஆரம்ப கால வாழ்க்கை முறைகளானது இவ்வாறெல்லாம் இல்லாமல் மனித நடத்தைக் கோலங்கள் அனைத்தையும் குணமாக்கல் தன்மைகள் கொண்டு செவ்வனே வழி நகர்த்திச் செல்லும் வழிமுறைகளைக் கொண்டதாகவே இருந்தன.
குணமாக்கல் செயற்பாடானது உளப்பாதிப்புற்ற மனிதனை மீண்டும் முழுமையாக பழைய நிலைக்குத் திருப்பி எடுத்தல் அல்லது அவரை சமூகத்திற்கு இயைபாக மாற்றுதல் போன்ற வேலைகளினைச் செய்வதாகும். மருந்து மாத்திரைகள் என்பது ஒருவருடைய குணங்குறிகளிலே மாத்திரம் தான் தாக்கம் செலுத்தும் ஆனால் ஒருவரை முழுமையாகக் குணமாக்குவதில் அவரின் நம்பிக்கையுடன் தொடர்புடைய சடங்குகள் வழிபாட்டு முறைகள் களியாட்டங்கள் என்பன மிகப்பிரதான பங்கு வகிப்பவையாகக் காணப்படுகின்றன. அநேகருக்கு தனது பிரச்சினை குணமாக வேண்டும் என்கின்ற தேவையானது உணரப்பட வேண்டும். இவ்வுணர்தலினை சடங்காற்றுகைகள் அபரிமிதமாகச் செயற்படுத்துபவையாக அமைந்து விடுகின்றன. ஆனால் இன்றைய கால காலனியச் சிந்தனைகளும் அதனோடு இணைந்த செயற்பாடுகளும் சடங்காற்றுகைகளை நாகரிகமற்ற வினைப்பாடுகள் என எளிதில் புறந்தள்ளி விடுகின்றமை வேதனைக்குரியது.
சடங்காற்றுகை ஒன்று இடம்பெறுகின்ற போது அங்கு எதுவித உள்மனக் கட்டுப்பாடுகளோ தனிமனித உளச்சிக்கல்களினைப் பாதிக்கின்ற காரணிகளோ இடம் பெறுவதென்பது பெரும்பாலும் குறைவாகவே காணப்படுகின்றன. இவ்வாறு காணப்படுகின்ற சடங்காற்றுகைகளினை நாம் ஏலவே வகைப்பிரித்தது போன்று வழிபாட்டுச் சடங்குகள், வாழ்வியற் சடங்குகள் என கொள்ளமுடியும் போது, வாழ்வியற் சடங்குகளிலும் குணமாக்கல் தன்மையானது மிகையாகவே காணப்படுகின்றது. திருமணச் சடங்கொன்றினை ஒரு சமூகம் செய்கின்ற போது, பங்கொள்கின்ற அனைத்து அங்கத்தவர்களும் ஏதோவொரு உள்முக சந்தோசம், திருப்தி, நிம்மதி, பெருமிதம், மகிழ்வானந்தம் முதலானவற்றை அடைந்து விடுகின்றனர். இவை போன்ற உணர்வுகளினைக் கொடுக்கும் கலைதான் குணமாக்கலின் உச்சகட்ட வேலையும். இதனை மேலைத்தேய வைத்திய முறைகள் போல் கூவி விற்காமல் (கூவி விற்றும் பயனில்லை.) மிகவும் சாதாரணமாக வாழ்வியற் சடங்காற்றுகைகள் மனிதர்களுக்கு கொடுத்து விடுகின்றன. அதுவும் ஆற்றுவோரால் ஆற்றுவோருக்கும் பங்குகொள்வோர்க்கும் என இரட்டைச் சமனிலையுடன் கொடுக்கப்படுகின்றன; எடுக்கப்படுகின்றன.
வாழ்வியற் சடங்குகளில் குணமாக்கல் தன்மைகள்
வாழ்வியற் சடங்குகளினை வாழ்க்கை வட்டச் சடங்குகள் என்றும் அழைக்கும் வழக்கமுண்டு. மனிதரின் பிறப்பு முதல் இறப்பு வரையான காலப்பகுதிகளுக்கும் மற்றும் இறப்புக்கு பின்னரும் செய்யப்படுகின்ற சடங்கு நடவடிக்கையாக நாம் இவற்றினைக் கொள்ள முடியும். அவ்வகையிலே பிறப்புச்சடங்கு சாமத்தியச் சடங்கு, திருமணச்சடங்கு, வளைகாப்புச் சடங்கு, மரணச்சடங்கு போன்றவற்றினை பொதுவாக வாழ்க்கை வட்டச்சடங்குகள் எனலாம். மனிதருடைய வாழ்க்கைச் சுழற்சியில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான சடங்குகள் அனைத்தும் மனித வாழ்வினை பல தொடர் நிலைகளாகப் பகுத்து ஒவ்வொரு நிலைக்கும் ஓர் அர்த்தப்பாட்டடினைக் கொடுத்து அதை இன்னொரு நிலைக்கு இட்டுச் செல்லும் பொருட்டு அமைவதாகக் காணப்படுகின்றது எனலாம். வாழ்க்கை இன்பத்தைப் பெற்றுக்கொள்ளவும், துன்பத்தைப் பகிரந்து கொள்ளவும், கடமைகளை உணர்ந்து செயலாற்றி வெற்றிகண்டு வாழ்வினைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ளவும், மக்கள் ஒப்புரவு முறையில் உதவியும் துணையுஞ் செய்து, உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவும் வாழ்வியற் சடங்குகள் உதவுகின்றன.
திருமணச் சடங்கில் குணமாக்கல்
மனிதருடைய வாழ்வியல் வெளிகளிலே திருமணச் சடங்கென்பது ஓர் இன்றியமையாத திருப்புமுனையாகவே அமைந்து விடுகின்றது எனலாம். உலகவாழ் சமூகத்திலே பல்வகைமையான மனித கூட்டங்கள் காணப்பட்டாலும் ஒவ்வொரு கூட்டங்களின் மரபுக்கும், பண்பாட்டுக்கும் அமைய இத்திருமணச் சடங்கானது வேறுபட்டும், தனித்துவமாகவும் காணப்பட்டு வருகின்றது எனலாம். இந்து சமயப் பாரம்பரியத்தில் பார்க்கப்போனால் இவ்வாறான வகைப்பாடுகளுடன் கூடிய பல நிகழ்வுகள் நடந்தேறுபவையாக இருக்கும். அதாவது பொருத்தம் பார்த்தல், திருமணப் பேச்சு, கேட்டுப் போதல், நாள் குறித்தல், கூறை உடுப்பு வாங்குதல், தாலிக்குப் பொன்னுருக்குதல், திருமண அழைப்பு, பால் தப்புதலும் நீராட்டுதலும், மணமகனை அழைத்து வரச்செல்லல், மணமகனை வரவேற்றலும் திருமணச் சடங்கும், பால் பழம் பருகுதல், கலத்தில் போடுதல், கால் மாறிச்செல்லல், சம்பந்தி வருதல் போன்ற இதர நிகழ்வுகள் இதனோடு இணைந்தவையாகக் கட்டமைக்கப்பட்டுச் கொண்டாடப்படுகின்றன. இந்நிகழ்வுகளில் சிலவை முன்பின் மாறியோ அல்லது தவிர்த்தோ பிரதேசத்திற்குப் பிரதேசம் மேற்கொள்ளப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
இதன் போது நடைபெறுகின்ற ஒவ்வொரு நிகழ்வுகளும் ஒவ்வொரு ஆற்றுகையாக மிகச்செம்மையாக செய்யப்படுவனவாக இருக்கும். அதனதன் தன்மைகளுக்கு அமைவாக ஒவ்வொரு நிகழ்வுகளும் அதனைப் புரிவோருக்கும் அதில் பங்கெடுப்போருக்கும் அதிக பட்ச உளத்திருப்தியைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். இவ்வாறான மகிழ்வின் விளிம்பில் ஆற்றுகைசார் பண்புகளுடன் செய்யப்படுவவையாகத் திருமணச்சடங்குகள் அமைந்து விடுகின்றன. இத்தன்மைகள் கொண்ட திருமணச் சடங்கிலே புதுவாழ்வை ஆரம்பிக்கின்ற தம்பதிகள், அவர்கள் சார்ந்த பெற்றோர் உட்பட்ட உறவுகள், அதனுடன் இணைந்த அயல் சமூகம் போன்ற அனைத்து மனித சமூகமும் மனதளவில் பெருவாரியான உளத்திருப்தி நிலையனை மிகச் சாதாரணமாக அடைந்து விடுகின்றனர். தனது மகளுக்கோ, மகனுக்கோ திருமணம் ஒன்றினைச் சிறப்பாக நடத்தி விடுகின்ற போது பெற்றோர்கள் அடைந்து விடுகின்ற மனத்திருப்தி, ஆறுதல் பெருமிதம் என்பன அவர்களின் வாழ்க்கையை அடுத்த கட்ட நிலைக்கு தமது சமூகத்தே பெரு மதிப்புடன் நகர்த்தி விடுவதாக அமைந்து விடுகின்றன. பெரும்பான்மையான பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்யாணத்தை சிறப்புடன் நடத்தி விடுவதற்காகவே வாழ்நாளைக் கழிப்பவர்களாக இருந்து விடுகின்றனர்.
பூப்புச் சடங்கில் குணமாக்கல்
தமது வீட்டுப் பிள்ளை சாமத்தியம் அடைந்தவுடன் உறவினர்கள் மற்றும் ஊரவர்களுக்கு அச்செய்தி பரப்பப்படும். இதனை “முதல் விசளம்” என்பர். சாமத்தியம் அடைந்த அன்றைய மாலையிலேயே பிள்ளைக்கு முதல் முழுக்கு நீராட்டல் நடைபெறும். இவ்வாறு முதல் நீர் வார்த்தல் ஆனது குப்பைத் தண்ணீர் வார்த்தல்,முதல் தண்ணீர் வார்த்தல் என்னும் பெயர்களாளும் அழைக்கப்படும். முதலாவது நீர் வார்ப்பவர் மாமி அல்லது பாட்டி உறவுமுறையில் உள்ளவர்களாய் இருத்தல் வேண்டும். அதன் பின்னரே ஏனையவர்கள் தண்ணீர் வார்க்க வேண்டும். இவ்வாறு ஆரம்பமாகும் இச்சடங்கு முறையானது இன்னும் பல உள் நிகழ்வுகளைத் தன்னுள் கொண்டதாகவே காணப்படுகின்றது. அதாவது கூறை முடியும் அறைக்கும்பமும் வைத்தல், விசேட உணவு செய்தல், சடங்கு நிகழ்வு, நீராட்டல், கண்ணூறு கழித்தல், பலகாரம் பறித்தல், மஞ்சள் விளையாட்டு போன்றனவாக அமைகின்றன. இதில் மஞ்சள் நீராட்டு என்பது மிகவும் மகிழ்ச்சிகரமான நிகழ்வாக அமையும். அதிலே மைத்துன உறவுமுறையில் அமைந்த ஆண், பெண் இருபாலாரும் தத்தமக்கிடையில் மஞ்சள் நீரூற்றி மகிழ்ந்து விளையாடுவர். அங்கே அனைவரும் தத்தமது தனிப்பட்ட கவலைகளை மறந்து அச்சமயத்தில் மிகவும் சந்தோசமாக இருப்பர். அதன் மூலம் மிகப்பெறுதியான ஓர் உளத்திருப்தி நிலை அங்கு மேலோங்கி ஓய்வதாக அமைந்து விடும். சங்க இலக்கியப் பாடலான புறநானூற்றில் பூப்புச்சடங்கு பற்றி பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது.
“பாரி பறம்பின் பனிச்சுனை போல
காண்டற் கரியளாகி மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவொடு மண்ணிய
துகில் விரி கடுப்ப நுடங்கி தண்ணென
அகில் ஆர் நறுமபுகை சென்றடங்கிய
கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு
மனைச் செறிந் தனளே வாணுதல்….”
என பெண் பூப்பு அடைந்தால் பிறரால் காண்பதற்கு அரியவளாக, பெண்மை நிரம்பிய பொலிவொடு நன்கு வெளுத்து மடித்த துகில் போல அகிலின் நறும் புகை கமழும் கபில நிற வீட்டிற்குள் மனைச் செறிக்கப்பட்டாள் என்று பெண்ணின் பூப்புச் சடங்கினை இப்பாடல் வெளிப்படுத்தி நிற்பதைக் காணலாம். இவ்வாறான தன்மைகளைக் கொண்டமைந்ததான இச்சாமத்தியச் சடங்கானது ஒரு சமூகம் ஒன்றினுள் வளர்க்கின்ற பெண்ணொருத்தியின் பெறுதியினையும், ஒரு இளம் பெண் சார்ந்தும், அவளது உறவுகள் சார்ந்தும் பெருவாரியான உளத்திருப்பதி நிலையினைக் கொடுப்பதாகவே இன்றும் கீழைத்தேய நாட்டாரிடம் காணப்படுவதாக அமைந்து விடுகின்றது எனலாம்.
மரணச்சடங்கில் குணமாக்கல்
மரணச்சடங்கிலே குணமாக்கலா? மரணம் என்றாலே அது அவலம் நிறைந்த நிகழ்வல்லவா? இதில் எப்படி குணமாக்கல் தன்மைகள் காணப்படும்?. முதலான கேள்விகள் தோன்றலாம். பார்க்கப் போனால் ஏனைய சடங்கு வழிமுறைகளில் கிடைக்கப் பெறுகின்ற குணமாக்கல் விளைவுகளை விட மரணச்சடங்கின் வாயிலாக ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய குணமாக்கல் விளைவுகளே மனித சமூதாயத்துள் மிகத்தேவையான விடயமாகும். இச்சடங்கானது துன்ப உணர்வுடன் தொடர்புடையதாக அமைந்து விடுவதாகும். ஒரு நபர் இறந்து விட்டால் அவரைச் சார்ந்து இருக்கின்ற அத்தனை உறவுகளும் ஆட்டம் கண்டு விடும். தனது உறவுகளின் பிரிவைத் தாங்க முடியாத உறவுகள் தாங்களும் உயிரை மாய்த்துக் கொள்ள நினைக்கும், சில உறவுகள் பித்துப்பிடித்து அலையும். சிலவை வாழ்வைத் தொலைத்து விட்டுத் திரியும். இவ்வாறான நிலைமைகளில் இருந்து விடுபடும் குணமாக்கல் நிலைமைகளைச் செய்வதாகவே இறப்புச் சடங்குகள் அமைந்து விடுகின்றன எனலாம்.
தமிழர் பண்பாட்டில் இறந்தவரின் மரணச்சடங்கிலே எண்ணெய் வைத்தல், நீராட்டுதல், இறந்தவரின் உடல் வைக்கப்படும் திசை பற்றிய நம்பிக்கை, பிரேதம் வைக்கும் இடத்தின் மேல் வெள்ளை கட்டுதல், உடலின் தலைமாட்டில் குத்து விளக்கேற்றல், பிரேதம் வீட்டில் வைக்கப்படும் நாட்கள், வாசகங்கள் ஓதல், வாய்க்கரிசி போடுதல், பிரேதத்தை அடக்கம் செய்யும் முறைகள், மரணமும் தீட்டும், பிரேதத்தை அடக்கிய பின்னர் செய்யப்படும் சடங்குகள் போன்ற நிகழ்வுகளும் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. என்னதான் இருந்தாலும் இவ்வாறான மரணச்சடங்கு நடவடிக்கைகளானது ஒவ்வொரு மனிதச் சமூகப் பிரிவுகளுக்கு அமைவாக வெவ்வேறு விதமாகவும் அமைந்து விடுகின்றமையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விடயமாகும்.
மேற்சொல்லப்பட்ட ஒவ்வொரு சடங்கு நிகழ்வுகளிலும் இடம் பெறுகின்ற அனைத்து நடவடிக்கைகளும் இறந்தவரின் ஆத்ம சாந்தியை வேண்டிச் செய்யப்படுகின்ற போர்வையில் அவர் சார்ந்த உறவுகளின் மனச்சாந்தியை ஈடு செய்வதாகவே அமைந்து விடுகின்றமையை ஆழ்ந்து நோக்கின் விளங்கும். பிரேதம் வீட்டில் இருக்கும் போது அவர் சார்ந்த உறவுகள் படுகின்ற உள அவதியானது அடக்கம் செய்யப்பட்ட மூன்றாவது நாள் பால் ஊற்றுதலின் மூலம் சற்றுக் குறைவதாகக் காணப்படுகின்றது. பின்னர் எட்டாவது நாள் நிகழ்வின் மூலம் இறந்தவர் பற்றியதான மன எண்ணப்பாடுகள் எல்லாம் படிப்படியாகக் குறைந்து கொண்டே போகும். அன்றைய நாள் நிகழ்விலே இறந்தவருக்கு பிடித்தமான உணவுகளை தயாரித்து அவருக்குப் படைத்த பின்னர் நிகழ்வில் பங்கொண்ட அனைவரும் சேர்ந்து அதை உண்பர். இவ்வாறான இறப்புக்குப் பின்னரான ஒவ்வொரு சடங்கு நிகழ்வுகளின் மூலம் இறந்த நபர் பற்றியதான உறவினர்களின் நிலைப்பாடானது ஒரு சீரான நிலைக்கு வந்துவிடுவதான குணமாக்கல் நிலைமைகள் தோன்றி விடுவதையும் அவதானிக்க முடியும்.
ஆகவே இதுவரைப் பார்க்கப் பட்ட திருமணம், பூப்புச் சடங்கு, இறப்புச் சடங்கு என்பவைகள் பொதுவான வாழ்வியற் சடங்குகளாகும். இதனை விட தொழில் முறைச்சடங்குகள், பருவகாலச் சடங்குகள், சமூகச் சடங்குகள் என்பனவும் இதனுள் அடங்கும். இவற்றிலும் குணமாக்கல் தன்மை என்பது காணப்படுகின்றது. மனிதருக்கு ஏற்படுகின்றதான திருப்தி, சந்தோசம், மன நிறைவு, அமைதி, ஆனந்தம் , சாந்தம் போன்ற உணர்வலைகளைக் கொடுக்கும் நடவடிக்கையாகவும் குணமாக்கல் என்பது அமைந்து விடுகின்றது எனலாம்.
வழிபாட்டுச் சடங்கில் குணமாக்கல்
மனிதரிடையே காணப்படுகின்ற கடவுள் வழிபாடானது ஒருவகையான பாதுகாப்பு நம்பிக்கை இணைப்பாக மனிதர்களுக்குக் காணப்படுகின்றது. அதாவது கடவுள் நம்பிக்கை எனப்படுவது ஒருவருக்கு நான் என்னிலும் மேலான பாதுகாப்புத் தன்மையுடன் இணைக்கப் பட்டுள்ளேன் என்னும் உறுதியான எண்ணப்பாட்டினை கொடுப்பதாகும். இவ்வாறான இணைப்பைக் கொண்ட கிராமிய வழிபாட்டுச் சடங்குகள் மூலம் மக்கள் தமக்கு நெருக்கமான கடவுளர்களுடன் இன்னும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்கின்றனர். சடங்காற்றுகை ஒன்றிலே எவரும் இன்னொருவரினை வற்புறுத்தி இணைத்துக் கொள்வது கிடையாது. பங்குகொள்கின்ற அனைவரும் தம் விருப்பின் பெயரில் சுயமாகவே இணைந்து, சடங்காற்றுகையின் வழிமுறைகளில் பங்கெடுத்து தாமாகவே குணமாக்கலினை அடைந்து விடுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளினைக் கொண்ட சடங்காற்றுகை என்பது ஒரு நடத்தைக் கோல சிகிச்சை முறையாகும்.
ஒரு வழிபாட்டுச் சடங்காற்றுகை செயற்றிறனில் சடங்காற்றுகையின் தன்மையினைப் பொறுத்து பல வழக்குகள் காணப்படும். குறிப்பிட்ட சமூகம் மற்றும் அதன் பண்பாட்டு மரபுகளில் நோய் நீக்கல் அல்லது குணமாக்கல் குறித்து உறுதியான நம்பிக்கைப் பாத்திரமாக சடங்குகள் அமைந்து விடுகின்றன. பொதுவாகப் பார்ப்போமானால் சடங்கொன்றின் மூலம் மனித சிந்தனையை வலுப்படுத்தும் ஒன்றுடனொன்று தொர்பு படுத்துகின்ற வேலைப்பாடுகள் சமூகத்துள்ளே காணப்படுகின்றமையை உணரமுடியும். வழிபாட்டுச் சடங்காற்றுகை ஒன்றினை நடத்துகின்ற நபரானவர் அடிப்படையில் மற்ற மனிதர்களுடன் பிரிக்க முடியாத வகையில் மனித மற்றும் மனிதரல்லாதவராக புலப்படும் அதே சமயம் கண்ணுக்குப் புலப்படாத அதிமானுட சக்தியுடன் தொடர்பு கொண்டவராகப் பார்க்கப்படுகின்றார். அவரிடம் காணப்படுகின்ற அச்சக்தியானது நம்பிக்கை உறவு பாதுகாப்பு மகிழ்வு, அமைதி போன்ற உளத்திருப்தி நிலைமைகளை சடங்கில் பங்குகொள்வோருக்கு கொடுத்து விடுகின்றதான குணமாக்கல் செயன்முறைகளினைச் செய்துவிடுகின்றன.
இவ்வாறான வேலைப்பாடுகளுடன் கூடிய சடங்காற்றுகைகளிலே பல சிறப்பம்சங்கள் உள்ளன. அதாவது சமூக மட்டத்திலே உயர்ந்த அல்லது தாழ்ந்த என்னும் வர்க்க பேதம் கொண்ட மனித கூட்டங்கள் அனைத்தும் ஒன்றாகச் சங்கமிக்கும் வழிபாட்டுச் சடங்கு நடவடிக்கை ஒன்றிலே அதுவரை காலமும் சமூகத்தில் சாதாரண மனிதராகக் காணப்பட்ட ஒருவர் குறித்த சடங்கினை நடத்துபவராகக் காணப்படும் போது அங்கு அவர் அனைவரிலும் கூடிய அதிமானுட தன்மை கொண்டவராகப் பார்க்கப்படுகின்றார், மதிப்புக் கொடுக்கப்படுகின்றார். அத்தருணம் அவரும் அவர் சார்ந்த சமூகமும் ஓர் உயரிய தன்மை கொண்ட பாத்திரங்களாக மாற்றப்படுகின்றனர். இது அச்சமூகம் சார்ந்த அனைவருக்குமான குணமாக்கல் வெளிப்பாடாகும். சடங்குகளின் செயற்பாட்டு விளைவுகள் சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றத்தினை ஆய்வு செய்த விக்டர் டெர்னர் இவ்வாறான சடங்கு செயற்பாட்டினை மீவியல் என்னும் சொல்லின் மூலம் விளக்குகின்றார். இவர் தன் கூற்றுப்படி “சடங்கு சூழலில் தொழிற்படும் சமூக அமைப்பு இயல்பான சமூக அமைப்பிற்கு நேரெதிரான ஒழுங்கமைப்பைக் கொண்டிருக்கின்றது” என்றார். இதனாலேயே விக்டர் டெர்னர் சடங்கின் மையமான இடைவெளியை ‘தலைகீழாக்கம்’ அதாவது இயல்பான சமூக அமைப்பிற்கு தலைகீழான ஒழுங்கமைப்பு உடையது என்ற பொருளில் அழைக்கின்றார். இந்நிலையில் சடங்கில் பங்குபெறுபவர்கள் ஏற்கனவே சமூகத்தில் பெற்றுள்ள அடையாளம் அதிகாரம் போன்றவற்றை விடுத்து புதிய அதிகாரத்தினையும் அடையாளத்தினையும் பெறுகின்றனர் என்னும் கருத்தியலை முன்வைத்தார்.
இவ்வாறான தன்மையினை சடங்கு ஆற்றுகைகளினால் மாத்திரமே தான் கொடுத்து விட முடியும் எனலாம். வழிபாட்டுச் சடங்குகளில் உளவியல் நடத்தைகள் வெளிப்படுகின்றவானக் காணப்படும். அச்சூழலில் குறிப்பிட்ட நோக்குடனான உடல் அசைவுகள், சொற்கள் பொருட்கள் பாடல்கள் வாத்திய ஓசைகள் மன்றாட்டுகள் போன்றவை மூலமும் குணமாக்கல் தன்மையானது அவரவருக்கு வெளிப்பட்டு உதவுவதாகக் காணப்படும். இவ்வாறான சடங்காற்றுகைகளின் போது கூட்டு நிலையிலான ஈடுபாடானது பங்குபற்றுவோரிடம் காணப்படுகின்றது. இங்கு ஒரே மனவெழுச்சியில் பங்கொள்வோர் ஒன்றுபட்டு விடுகின்றனர். இதுவும் ஓர் உளவியல் திருப்தியைக் கொடுப்பதாக அமையும். வழிபாட்டுச் சடங்காற்றுகை ஒன்றிலே தீயில் எரித்தல், நீரில் கரைத்தல் ,பலியிடல் முதலான செயற்பாடுகள் இடம் பெறும். இவ்வேளையில் பங்குதாரர்கள் குறியீட்டு நிலையில் தமது எதிர்ப்படிமங்களை எதிர்க்கவும் கரைக்கவும் பலியிடவும் வல்ல உளவியல் சார் குணமாக்கல் நிலையானது ஏற்பட்டு விடுகின்றது.
இவ்வாறான வழிபாட்டில் உளவியல் மற்றும் உடலியல் பரிமாணங்கள் காணப்படுகின்றன. ஒரு தனிமனித உளச்சுகமானது மேற்கண்ட வழிபாட்டு முறைகளின் மூலம் எட்டப்படுகின்றது. மனதுள் புழுங்கிக் கிடந்த உளநெருக்கீடு தணிக்கப்பட்டு விடுகின்றது. இது போன்ற மிகப் பெரும் குணமாக்கல் நிலைமைகளினை மக்கள் அடைந்து விடுவதற்குக் காரணம் தமக்குண்டான அனைத்து பிணிகளினையும் தம்மை விஞ்சிய ஓர் அதிமானுட சக்தியிடம் கொட்டித் தீர்த்து அதனிடம் இருந்து பாதுகாப்பினைப் பெற்றுவிட்டோம் என்ற எண்ணப்பாட்டினைப் பெற்றுவிடுதலே ஆகும். சமூகத்திற்கு இயைபான சமூக இணக்கத்தையும் நேரான சமூக நடத்தைகளையும் வழிபாடுகள் வளர்த்து விடுகின்றன. மனதினைச் சுகமாக்கும் குணமாக்கல் செயல்முறைகள் மேற்கண்ட வழிபாடுகளினால் வலிதாக்கப்படுகின்றன.
இத்தன்மைகள் கொண்டதாக நாம் வழிபாட்டுச் சடங்குகளினைப் பார்க்கும் போது மனித உளவள விடுபடல் நிலைக்கான பெருவாரியான சந்தர்ப்பங்களினை வழங்கும் வழிபாட்டுச் சடங்கு முறைகள் என்பது கிராம மக்களிடையே காணப்படுகின்ற கிராமிய வழிபாட்டு முறைகளிலேயே அபரிமிதமாகக் காணப்படுவதனை நாம் ஏற்றுக் கொள்ளவே வேண்டும். இவ்வகையான வழிபாட்டு முறைகளினை பொதுவில் சிறு தெய்வ வழிபாடு எனக்கொள்வர். இவ்வகையான வழிபாடு சார் ஆசாரங்கள் கொண்ட மரபுச் சூழலிலே பாரம்பரியமாக குணமாக்கல் செய்வோர் கலையாடல் ,வாக்குச் சொல்லல், பேயோட்டல், கழிப்புச் சடங்கு, காவல் செய்தல், பரிகாரம் செய்தல் போன்ற நடைமுறைகள் ஊடாகவே மக்களை அதியுச்ச உள நெருக்கீட்டு நிலைகளில் இருந்து விடுபடச் செய்கின்றனர். தமிழ் சமுதாயச் சூழலிலே இந்து சமய நடைமுறைகளுடன் சேர்த்து கிறிஸ்தவம், முஸ்லிம் சமூகக் குழுக்களிடமும் இவ்வகையான வழிபாட்டுச் சடங்காசாரங்களினைப் பரவலாகக் காண முடியும்.
தொடரும்…
கமலநாதன் பத்திநாதன்
வேட்டுவச் சடங்காற்றுகையின் குணமாக்கல்- பகுதி I
வேட்டுவச் சடங்காற்றுகையின் குணமாக்கல்- பகுதி II
வேட்டுவச் சடங்காற்றுகையின் குணமாக்கல்- பகுதி III
வேட்டுவச் சடங்காற்றுகையின் குணமாக்கல்- பகுதி IV