கபிலித்தை புனித பயணம் – 2020

கபிலித்தை புனித பயணம் பகுதி I #மட்டுநகர்_திவா

எனக்கு வழமை போல திடீர் பயணம் தான். ஆனால் போய் வந்த பிறகு என்னட்ட சொல்லாம போயிட்டீங்களே.. சொல்லியிருக்க நானும் வந்திருப்பேன் என புலம்பியவர்கள் தான் அதிகம்.

நான் போனதிலேயே மிகவும் கஷ்டப்பட்டு போன பயணங்களில் முதல் இடம் இந்த இடத்துக்கு தான் கொடுப்பேன்.

மட்டக்களப்பில் இருந்து அண்ணளவாக 142 km தொலைவில் கொட்டியாகல எனும் இடம் உள்ளது. இங்கு செல்வதே பேரும் பாடாக இருந்தது மக்கள் வசிக்கும் கடைசி கிராமம் இது தான் அதனால் கடைசி 10 km பாதையை கடப்பதற்கு சற்று கடினமானதாக இருந்தது.
கொட்டியாகலயில் இருந்து தான் காட்டு வழி தொடங்குகிறது. காட்டில் ஜீப், உளவு இயந்திரம் மூலமாக மட்டும் தன் செல்ல முடியும். மழை இல்லாத நேரத்தில் மோட்டார் சைக்கிளில் சிலர் பயணம் செய்வதுமுண்டு.

வரலாற்று ஆய்வாளர் திருச்செல்வம் ஐயா மூலமாக இன்னும் 17 முகப்புத்தக நண்பர்களுடன் இணைந்தவாறு கபிலித்தை புனித யாத்திரை செல்வதற்கான திட்டங்கள் ஒரு மாதத்துக்கு முன்னரே தீட்டப்படுகிறது.

வாகன செலவு 2500 ரூபாயாகவும் சாப்பாட்டு செலவு 500 ஆகவும் மொத்தம் 3000 ரூபாய் ஒருவருக்கு செலவாகும் என கணக்கு போடப்பட்டது.

கபிலித்தை என்பது ஒரு புனித வனம். முருகன் வள்ளியை சந்தித்த புளியமரத்தடி இந்த வனத்தில் தான் உள்ளது.

இந்த புனித தன்மையை தொடர்ச்சியாக பேணுவதற்காக அங்கு செல்பவர்கள் அனைவரும் 21 நாள் கடுமையான விரதம் இருந்து தான் செல்ல வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத விதி.

விதியை மீறினால் காட்டில் ஏதும் அசம்பாவிதங்கள் நடந்துவிடும் என்ற பயத்தினால் பயபக்தியுடன் அனைவரும் விரதம் இருக்க தொடங்கினோம்.

ஜூலை 4 ஆம் திகதி பூரணை நாளன்று செல்வோம் அது தான் சிறப்பாக இருக்கும் என அந்த நாளையே கபிலித்தை செல்வதற்கு ஒதுக்கினோம்.

போனால் உடனே திரும்ப முடியாது ஒரு நாள் காட்டில் தங்கிவிட்டு அடுத்த நாள் வெளிச்சம் உள்ள நேரத்தில் தான் வர வேண்டும். இருட்டிய பின் வனத்தில் பயணம் செய்வது எவ்வளவு பிரச்சினையை கொண்டு வந்து சேர்க்கும் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

4 ஆம் திகதிக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன என எண்ணியபடியே நாட்கள் கழிந்தது. தேவையான பொருட்கள் பூசை பொருட்களை எல்லாம் ஒழுங்கு பண்ணி எடுத்துகொண்டு அதிகாலை 3.30 அளவில் மட்டக்களப்பில் இருந்து புறப்பட்டேன்.

முகப்புத்தக நண்பர்கள் என்பதால் இலங்கையின் ஒவ்வொரு பகுதிகளிலும் இருந்து வருகின்றனர். அனைவரும் 4 ஆம் திகதி காலை 7 மணிக்கு களுவொப்ப சந்தியில் சந்திப்பதாக திட்டம் இருந்தது.

அதிகாலை என்பதால் வாகன நெரிசல் எதுவும் இல்லை 2 1/2 மணிநேர பயணத்தின் பின்னர் சியம்பலாண்டுவ சந்தியில் இருந்து மொனராகலை பக்கமாக 2 km தொலைவில் உள்ள களுவொப்ப சந்திக்கு 6 மணியளவில் வந்து சேர்ந்தேன்.

அனைவரும் அவ் இடத்துக்கு வந்து சேரும் வரை அந்த சந்தியில் இருந்த சாப்பாட்டு கடையில் தேநீரும் ஒரு பணிஸ் உம் வாங்கி சாப்பிட்டு விட்டு அனைவருடனும் இணைந்து கொட்டியாகல நோக்கி பயணம் தொடர்ந்தது.

களுவொப்ப சந்தியில் இருந்து 20 km பயணம் செய்து கொட்டியாகல சந்தனவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

சந்தன 27 வயது இளைஞர் அவர் தான் அங்கிருந்து நாம் செல்வதற்கான ஏற்பாடுகள் திட்டங்கள் அனைத்தும் வகுத்து கொடுப்பவர்.

சந்தனவின் வீட்டில் காலை உணவாக இடியப்பம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. சாப்பிட்டு முடிவதற்குள் இரு உளவு இயந்திரங்கள் பின்னல் உள்ள பெட்டியில் மெத்தைகள் போட்டு அமர்ந்து செல்வதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு எம் முன்னால் வந்து நின்றது.
வேக வேகமாக எமது நாம் கொண்டு வந்த பொருட்கள் அனைத்தையும் டிராக்டரில் ஏற்றினோம்.

நேரம் காலை 10.30 இனியும் தாமதக்காமல் கிளம்பினால் தான் இருட்டுவதற்கு முன் சென்றடையலாம் என சந்தனவின் அப்பா சிங்களத்தில் சத்தமாக சொல்லிக்கொண்டே அனைவரையும் வேகமாக செயல்பட வைத்தார்.

சந்தனவின் அண்ணன் ஒரு டிராக்டரிலும், சந்தனவின் தம்பி ஒரு டிராக்டரிலும் சாரதியாக வந்து அமர சந்தனவின் அப்பா வழிகாட்டியாக முன்னே இருந்த டிராக்டரில் ஏறிக்கொண்டதும் அரோகரா சந்தம் முழக்கத்துடன் டிராக்டர் கபிலித்தை வனம் நோக்கி கிளம்பியது.

கபிலித்தை செல்வதற்கு 4 வழிகள் உள்ளன மற்றைய 3 வழியாக செல்லும் போது அனுமதிபெற வேண்டும். நாம் செல்லும் வழியில் மட்டும் அனுமதி இல்லாமல் காட்டுக்குள் செல்லலாம்.

நான் செல்லும் டிராக்டரில் என்னுடன் சேர்த்து 9 பேர். திருச்செல்வம் ஐயாவும் எனது லவன் அத்தானின் தம்பி ரதீசுமே எனக்கு தெரிந்த முகங்கள்.. எனினும் செல்லும் வழியிலேயே நாம் அனைவரும் ஏற்கனவே பல வருடங்கள் பழகியவர்கள் போல கதைக்க தொடங்கிவிட்டோம்.

5 1/2 மணி நேர பயணம் இதில் முதல் இரு மணி நேரமும் வெயிலில் தான் செல்ல வேண்டும். சேனை பயிர் செய்கைக்காக காட்டு மரங்கள் அதிகமாக வெட்டப்பட்டதால் வெயில் தலையை பிளந்தது. வேட்டியின் சால்வையை தலையில் போருத்தபடியே முதல் கடினமான வெயில் பகுதி கழிந்தது.

முதல் ஒரு மணி நேரத்தின் பின்னர் நல்ல பெரிய கூழா மரத்தடியில் இரு வண்டிகளும் நிறுத்தப்பட்டு அனைவருக்கும் 10 நிமிட ஓய்வு வழங்கப்பட்டது. அந்த 10 நிமிடத்தையும் நான் விழுந்து கிடந்த கூழாம் பழங்களை பொறுக்குவதிலேயே கழித்தேன். கடும் புளிப்பு தான் அந்த பழம், பள்ளி பருவத்தில் வீதியோரத்தில் விற்கும் அந்த கூழாம் பழங்களினை வாங்க சாப்பாட்டுக்கு கொண்டு செல்லும் 10 ரூபாயில் 5 ரூபாய் மிச்சம் பிடித்து கொண்டு வந்து வீடு செல்லும் வரை கூழாம்பழம் சாப்பிட்டு கொண்டு சென்ற அழகிய தருணங்கள் எல்லாம் நினைவில் வந்து போனது.

மீண்டும் கடகடவென்ற சத்தத்துடன் வண்டி செல்ல தொடங்கியது சரியான குலுக்கம் சரியாக இருக்க கூட முடியாது. சாய்ந்து கொண்டு இருந்தால் முதுகு அடிபட்டு கடுமையாக வலிக்கும். மேலே கீழேயென தூக்கி தூக்கி எறிந்து கொண்டே செல்லும். டிராக்டரில் பின்னல் பெட்டியில் அமர்ந்து பயணம் செய்தவர்கள் இந்த வரிகளின் வலிகளை உணர்வீர்கள்.

2 மணி நேர பயணத்தின் முடிவில் அடர்ந்த காட்டினை சென்றடைந்தோம் அங்கே சென்றதும் ஓரளவு மகிழ்ச்சி வெயில் இருந்து விடுதலை கிடைத்துவிட்டது என்று.
காட்டினுள் போனதும் எமக்கு அங்கு வித்தியாசமானதொரு சவால் காத்திருந்தது. மரங்கள் அடர்ந்து இருந்தமையால் டிராக்டர் இரு மரங்களுக்கிடையில் புகுந்து புகுந்து சென்றுகொண்டிருந்தது.

பெட்டியின் வெளியே நமது கை வந்தால் மரமும் பெட்டியும் மோதும் போது மரத்தில் பட்டு கை துண்டிக்கப்பட்டு விடும். எனவே எந்த ஒரு சூழ்நிலையிலும் கையை வெளியே வைக்கக் கூடாது என சந்தனவின் அப்பா சிங்களத்தில் எச்சரித்துகொண்டிருந்தார்.

3 மணி நேர பயணத்தின் பின் காட்டின் நடுவே ஒரு இளைப்பாறும் இடம் வந்தது. அங்கே ஏற்கனவே ஒரு டிரக்டரில் ஜிந்துப்பிட்டியில் இருந்து சிங்கள பக்தர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் எமக்கும் சேர்த்து கோப்பி போட்டு தந்தார்கள்.

அங்கே ஒரு முருகன் சிலை உயரத்தில் இருந்தது அதற்கு இலைகளை முறித்து வைத்து வழிபட வேண்டும். நாமும் அவ்வாறே வழிபாடுகளை செய்துவிட்டு அவர்கள் தந்த கொப்பியையும் அருந்திக்கொண்டு அவர்கள் தந்த உறைப்பான சம்பலும் பாணையும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம்.

அந்த நேரத்தில் எமது டிராக்டர் சாரதிகள் கன நேரமாக அந்த முருகனிடம் பிராத்தனை செய்தனர். பின்னர் அவர்களும் இலைக்கொத்துகளை முறித்து வைத்து அனைவரையும் பாதுகாப்பாக கொண்டு சேர்க்க வேண்டும் என கூறி ஒப்புவித்தனர். அவர்களது பக்தியை பார்க்கும் போதே மெய்சிலர்த்துப் போனோம்.

1/2 மணி நேர இடைவெளியின் பின்னர் மீண்டும் பயணம் தொடர்ந்தது. இப்போது 3 ஆவது டிராக்டர் உம் எங்களுடன் இணைந்து பயணிக்கிறது.

கபிலித்தை புனித பயணம் பகுதி I I #மட்டுநகர்_திவா

நாம் இடையில் கபிலித்தையில் இருந்து திரும்பி வரும் பல டிராக்டர்களையும் ஒரு ஜீப்பையும் சந்தித்து கடந்து வந்து கொண்டிருக்கும் போது மிகவும் சேறான பகுதி ஒன்றினுள் நுழைந்தோம். அது ஒரு வாகனம் மட்டுமே செல்ல கூடியளவு ஒடுங்கியதொரு இடம்.

நாம் அந்த சேற்றுப்பகுதியால் வந்து கொண்டிருக்கும் போது எமக்கு எதிர் திசையில் இருந்து இன்னும் 4 டிராக்டர்கள் ஒன்றாக வந்து சேர்ந்தன.

வாகன சாரதிகள் அநேகமாக ஒரே ஊர் காரர்கள் தான். அவர்கள் கேட்டதுக்கு இணங்க எமது டிராக்டர் சற்று பின்னே சென்று அவர்களுக்கு வழிவிடத்தயாரானது.

அப்போது வேகமாக சேற்று பகுதியால் சென்ற டிராக்டர் ஒன்று அவிடத்தில் தடம்புரண்டது. பின்னல் பெட்டியில் இருந்தவர்கள் அனைவரும் தூக்கி எரியப்பட்டனர்.

அவ்விடத்தில் இருந்த அனைவரும் தடம் புரண்ட பெட்டியை நிமிர்த்துவதர்க்கும் வீசி எறியப்பட்ட மக்களை தூக்குவதற்குமாக ஓடிச்சென்று 2 நிமிடத்துக்குள் அனைத்தையும் சரி செய்து விழுந்தவர்களையும் காப்பாற்றினர்.

பின் அனைவரும் சற்று நேரம் அவ்விடத்தில் தரித்து நின்று தடம் புரண்ட பெட்டியில் இருந்த கபிலித்தை பிரசாத்தத்தையும் பகிர்ந்து உண்டுவிட்டு. அவசரப்படாமல் பயணத்தினை தொடர்ந்தோம்.

12 சிற்றாறுகளை கடந்து இறுதியாக 5 1/2 மணி நேரத்தின் பின்னர் குமுக்கன் ஆற்று கரையை வந்தடைந்தோம்.

அங்கு கபிலித்தையின் காவல் சிலை ( வீரபாகு தேவர் என நினைக்கிறேன் சரியாக தெரியவில்லை) கையில் கத்தியுடன் எம்மை வரவேற்றது.

ஆற்றை கடந்தால் கபிலித்தை புனித வனம். ஆனால் உடனே ஆற்றை கடந்து சென்றிட முடியாது. அதற்காக சில சம்பிரதாயங்களை சரியாக செய்த பின்னரே அங்கு செல்ல முடியும்.

தற்போது மாலை 4 மணி ஆகி விட்டது. சந்தணவின் வீட்டில் இருந்து கொண்டு வந்த மதிய சாப்பாட்டு பார்சல்களை எடுத்து அனைவரும் சாபிட்டோம்.

கொண்டுவந்த நீர் அனைத்துமே வரும் வழியிலே குடித்து முடித்து விட்டோம். இனி நீர் தேவை எனின் ஆற்றில் பூவல் தோண்டி அதில் இருந்து தான் எடுக்க வேண்டும்.

வேக வேகமாக சாப்பிட்டுவிட்டு 4.45 மட்டில் ஆதிவாசிகளின் சம்பிரதாயங்களை நாமும் கடைப்பிடிக்க தயாரானோம். அனுபவம் வாய்ந்த திருச்செல்வம் ஐயா எமக்கு அனைத்துக்கும் வழிகாட்டியாக இருந்தார்.

ஆதிவாசிகளின் சடங்கு என்றால் இலை குளைகளை கட்டிக்கொண்டு தான் இருந்திருப்போம் என்று நினைக்க வேண்டாம். காலத்துக்கேற்ப மாற்றம் தேவை தானே எனினும் பழைமையையும் விட்டுவிட முடியாது.

குமுக்கன் ஆற்றின் கரையோரத்தில் 7 வட்ட வடிவமான கிணறுகளை தோண்டினோம் அவை ஒவ்வொன்றும் அண்ணளவாக 1 1/2 அடி அகலமும் 10-15 சென்றி மீட்டர் ஆழமுமாக இருந்தன.

ஒவ்வொரு கிணற்றினுள்ளும் மஞ்சள் தூள், 7 வர்ண பூக்கள் இட்டு 7 தடவைகள் ஒவ்வொரு கிணற்றிலும் நீராட வேண்டும். அப்படி தோண்டிய 7 கிணற்றினுள்ளும் மொத்தமாக 49 தடவை நீராடிய பின்னர் குமுக்கன் ஆற்றில் இறங்கி நீராட வேண்டும்.

பின்னர் வீரபாகு தேவருக்கு முன்னே உள்ள பத்தினி அம்மன் கோவிலுக்கு ஈர உடையுடனே சென்று வழிபட வேண்டும். இது அவர்களது மரபு.

நாம் நீராடிய பின்னர் துடைத்து விட்டு உலர்ந்த வேட்டி அணிந்து கொண்டே பத்தினி அம்மன் கோவிலுக்கு சென்றோம். அங்கே சென்றதும் பெரியதொரு ஏமாற்றம் பத்தினி அம்மன் இருந்த இடத்தில் தற்போது புத்தர் சிலைகள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது.

மனம் தளரவில்லை அவிடத்தில் இருந்த புத்தபகவானை பத்தினி அம்மனை(அம்மனாக) நினைத்தே வழிபட்டோம்.

குமுக்கன் ஆற்றில் நீர் மட்டம் ஆழமான பகுதிகளில் இடுப்பளவுக்கும் குறைவாகவே இருந்தது பெரும்பாலான பகுதிகளில் பாதம் நனையும் அளவு நீர் தான் ஓடிக்கொண்டிருந்தது. காட்டில் எங்கேனும் மழை பெய்தால் நீரோட்டம் சில நிமிடங்களிலேயே உச்சத்தை அடையலாம் எனவும் கூறப்பட்டது.

இங்கு வழிபாடுகளை முடிக்கும் போதே 6.15 ஆனது அவசர அவசரமாக குமுக்கன் ஆற்றை கடந்து முருகனின் புனித வனத்துக்குள் செல்ல முயன்ற போது வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் எமக்கு வனத்துக்குள் செல்ல அனுமதி வழங்க முடியாது என கூறினர்.

வன விலங்குகள் நடமாட்டம் நேரம் செல்ல செல்ல அதிகமாகிவிடும் அங்கே எமக்கு பாதுகாப்பு இல்லை என அந்த அதிகாரி கூறினார். நாம் 10 மணி நேரத்துக்கு அதிகமாக பயணம் செய்து வந்துள்ளோம் என நிலைமையை அவருக்கு சிங்களத்தில் விளங்கப்படுத்தினோம். பின்னர் 10 நிமிடம் மட்டுமே அனுமதி தருவோம் என கூறி உள்ளே எமக்கு காவலாகவும் வழிபாடு செய்யும் இடத்துக்கு வந்து கொண்டு இருந்தனர்.

வழக்கமாக சிங்கள மக்கள் முதல் நாள் குமுக்கன் ஆற்றங்கரையோரம் வந்தடைந்தாலும் அன்றே புனித வனப்பகுதிக்குள் செல்வதில்லை. அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்து சம்பிரதாயங்களை முடித்துவிட்டு தான் புனித வனத்துக்குள் வருவார்கள்.

உள்ளே ஒற்றையடி பாதை போல் அல்லாது பாதை சற்று பெரிதாகவே இருந்தது ஒரு ஜீப் வண்டி வந்து போக கூடிய அளவு பாதை. வனத்தின் நிலம் களிமண் தரை போன்றது. பாதையில் செல்லும் வழியெங்கும் பெரிய மரங்களின் வேர்கள் மேலெழும்பியபடியே மினுமினுப்பாக இருந்தது.

உதயன் ஐயாவும் குகன் ஐயாவும் அனைவரும் நீராட சென்று வந்த நேரத்துக்குள்ளே பிரசாதமாக வைக்க பிரட்டி வைத்திருந்த அவலையும் தூக்கிக்கொண்டு முதலாவதாக வழியில் அமைத்துள்ள புத்தர் சிலைகளையும் வணங்கிவிட்டு தொடர்ந்து பயணம் செய்துகொண்டே இருக்கிறோம்..

பாதை ஒடுங்கிகொண்டே செல்கிறது.. இருட்டிவிட்டது மரங்களும் அடத்தியாக இருந்ததால் வெளிச்சம் சற்று குறைவாகவே இருக்கிறது. தூரத்தில் முருகன் சிலைகள் வெளிச்சமாக தெரிவதால் வந்து விட்டோம் என சந்தோசப்பட்டுகொண்டு அருகில் செல்கிறோம்.

சிங்களத்தில் யாரையோ ஒருவர் அதட்டிகொண்டிருக்கும் பாணியில் சத்தம் கேட்கிறது. திடீர் என எமக்கு ஒரு கறுப்பு உருவம் தெரிகிறது. பயமாக தான் இருந்தது என்றாலும் நாம் எதிர்பார்த்தது தான் நடந்துகொண்டிருக்கிறது. கபிலித்தையின் பிரதான காவல் காரன் அவர் தான். அவரது கண்களை நாம் அண்ணார்ந்து தான் பார்க்க வேண்டும் அவ்வளவு பெரியவர்.

எம்மை அவர் தொல்லை பண்ணவில்லை. அந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி அதட்டிக்கொண்டிருந்தது இந்த காவல்காரனை தான்.. எவ்வளவு தைரியம் அவருக்கு 😲

கையில் ஒரு மெல்லிய கம்பு ஒன்று தான் இருந்தது. கம்பின் உயரம் 6 -7 அடிகள் இருக்கும் முனைப்பகுதி சற்று கூராக இருந்தது. அவர் கதைப்பதை கேட்டுக்கொண்டே அதுவும் காதை ஆட்டியபடி அசைந்து கொண்டு நின்றது.

நாம் தற்போது நின்றுகொண்டிருந்த இடம் சற்று வெளியான பகுதி ( மரங்கள் சுற்றி வட்ட வடிவமாக உள்ளது) நடுவில் பெரிய களியால் செய்யப்பட்ட விளக்கு ஒளிர்ந்துகொண்டிருந்தது. பெரியதொரு பிள்ளையார் சிலை கறுப்பு நிறத்தில் இருந்தது. சந்தனக்குச்சிகளின் வாசனை காட்டின் வாசனையுடன் கலந்து மனதை மயக்கியது. எமக்கு நேராக வட்ட வடிவத்தில் கம்பிகளால் காவலிடப்பட்டவாறு மிகவும் பாதுகாப்பாக கருங்கல் முருகன் சிலை ஒன்று இருந்தது. அந்த சிலை 1 1/4 அடி மட்டில் உயரம் இருக்கும்.

கம்பி அடித்திருந்த இடமெல்லாம் மக்கள் நேர்த்திகடனாக கொண்டு வந்த வேல்களும் , சிவப்பு வெள்ளை என துணிகளால் கட்டப்பட்ட காசுகளும் நிரம்பி காணப்பட்டது.

அந்த கம்பி அடிக்கப்பட்ட இடத்தினை மையமாக வைத்து சுற்ற வர சில முருகன் பிள்ளையார் சிலைகளும் உடைந்த லிங்கம் ஒன்றின் மேற்பகுதியும் ஒரு மரத்தினால் செய்யப்பட்ட சிலையும், சீமெந்தினால் செய்யப்பட்ட சிலையும் இருந்தது (இவற்றின் பெயர் என்னவென்று தெரியவில்லை)

தேங்காய் உடைப்பதற்கெனவும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டு அதற்க்கு மரபலகையால் உடைக்கும் தேங்காய் வெளியே தெறிக்காமல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சற்று நேரம் பயத்துடன் அந்த இடத்தில் நின்றவாறு கொண்டு வந்த பிரசாதத்தையும் அங்கே இருந்த பீடத்தில் வைத்து வணங்கும் போது தான் திருச்செல்வம் ஐயா கூறினர் நாம் பார்க்க வந்த இடம் இது அல்ல இன்னும் சற்று தூரம் செல்ல வேண்டும்.

யானை அந்த இடத்தில் இருந்து நகர்ந்தால் தான் உள்ளே செல்ல முடியும் என்றார். சிறிது நேரத்தில் யானையும் சற்று நகர்ந்து வழிவிட்டது. அந்தவொரு சிறிய கணநேர இடைவெளிக்குள் நாம் கொஞ்சப்பேர் உள்ள சென்றுவிட்டோம். யானை மீண்டும் பாதையை அடைத்து விட்டது.

கபிலித்தை புனித பயணம் பகுதி I I I #மட்டுநகர்_திவா

இது வரை இல்லாத அமைதியை இப்போது எங்களால் உணர முடிந்தது. இந்த இடத்தில் யாருமே கதைக்க கூடாது என திருச்செல்வம் ஐயா கூறியதுக்கிணங்க அனைவரும் அமைதியாக முருகனும் வள்ளியும் சந்தித்த அந்த புளியமரத்தினை வந்தடைந்தோம்.

வருபவர்கள் எல்லோரும் மரத்தினை தொடுவதை தவிர்ப்பதற்காக ஒற்றை கம்பியினால் வேலி போன்ற அமைப்பினை ஏற்படுத்தியிருந்தனர். உள்ளே செல்ல தான் வேணும் என நினைப்பவர்களுக்கு அது ஒன்றும் தடை இல்லை எனினும் புனிதத்தன்மையை பேணுவதற்கு ஒத்துழைக்க வேண்டியது அனைவரதும் கடமையே.

இந்த மரத்தில் தான் கபிலித்தையில் மிகவும் பழைமையான ஆதிவாசிகள் வைத்து வணங்கிய மரத்தினால் செய்யப்பட்ட முருகன் சிலை உள்ளது. ஒரு ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக தான் இருக்கிறது அதை பாத்தாலே மனதுக்கு சந்தோசமாக தான் இருந்தது. இத்தனை கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு வந்தது இந்த இடத்தினை பார்க்கத்தானே..

இந்த இடத்தினை வைத்து பலர் காசு பார்க்க முயல்வர்.

பல இல்லாத கதைகள் எல்லாம் சொல்லி ஏமாற்றுவாங்க, பாத்து பக்குவமா இருக்கிறது உங்கட பொறுப்பு பிறகு முருகனை குறை சொல்ல கூடாது.

இந்த இடத்துக்கு 10 பேர் போகணும் என்றால் ஒருவரிடம் 1500 ரூபாய் கொட்டியாகலையில் இருந்து போக்குவரத்துக்கும், 500 ரூபாய் சாப்பாட்டுக்கும் இருந்தால் போதுமாக இருக்கும்.

இந்த புளிய மரத்தினை பற்றி பெரிதாக தம்பட்டம் அடிக்க நான் விரும்பவில்லை அந்த இடம் எவ்வளவு அமைதியாக மக்களை ஈர்த்துகொண்டிருக்கிறது என்பதை நேரில் சென்று தான் பார்க்க வேண்டும். அனைத்தையும் இங்கு சொல்லிவிட்டால் அங்கே சென்று மெய்சிலிர்த்து பார்க்க உங்களுக்கு ஒன்றுமிருக்காது.

இந்த மரத்தின் பழைமையான சிலையின் கீழே ஓர் பீடக்கல் போன்ற அமைப்பு உள்ளது. இதற்கு பெயர் சத்தியக்கல்.

எனது சத்தியக்கல்லா? அதெப்படி இவனுக்கு தெரியும் என்று கேட்கும் உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கும் கேட்குது…

அனைத்துமே அங்க ஃபோட்டோ எடுத்துகொண்டு இருக்கும் போது “தம்பி அந்த கல்லை zoom பண்ணி போட்டோ எடுங்க” என்று கூறிய பின் திருச்செல்வம் ஐயா சொன்னவை தான் இவையெல்லாம்.

ஆதி காலத்தில் இங்கு வாழ்ந்த வேடுவ மக்களது பிணக்குகளுக்கு நீதவானாக (நீதிமன்றமாக) இருந்தது இந்த மரத்தடி தான். பிரச்சினைகள் ஏற்படும் போது பிரச்சினைக்குரிய இரு தரப்பினரையும் கூட்டி கொண்டு வந்து இந்த சத்தியக்கல்லின் மீது கையை வைத்து அவரவர் தரப்பு நியாயங்களை முருகன் முந்நினிலையில் ஒப்புவிப்பர்களாம்.

பிழை எந்தப்பக்கம் இருக்கிறதோ அந்த தரப்பினருக்கு அன்று இரவு கடவுளால் தண்டனை வழங்கப்படுமாம். இதனால் அந்த வேடுவக் குடியிருப்பில் குற்றச்செயல்கள் செய்ய அனைவரும் பயப்பிடுவார்களாம்.

அப்படிப்பட்ட பின்னணி கதைகளுடன் தொடர்பு பட்டது தான் இந்த சத்தியக்கல்.. இதெல்லாம் உண்மையாவே நடந்திச்சா என்று கேட்காதீங்க என்னட்ட ஆதாரம் ஒன்றும் இல்லை.

ஆனால் சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய அந்த சத்தியக்கல் இன்னும் அங்க போற்றுதலுக்குரிய ஒரு விடயமாக இருக்கு என்பதை இதன் மூலமாக வாசகர்களுக்கு பதிவு செய்கிறேன்.

அடேங்கப்பா நல்லா இருட்டிட்டு.. என்றாலும் அன்று பௌர்ணமி தினம் என்றதால நிலவொளி எமக்கு துணையாக இருந்தது. நாங்க புளிய மரத்தினை சுற்றி கும்பிட்டு விட்டு வாறம் அப்போ தான் எங்களோட வந்த கொஞ்சப்பேர் ஓட்டமும் நடையுமாக புளிய மரம் இருந்த பக்கம் வாறாங்க..

என்ன செய்தீங்க இவ்வளவு நேரமா? என்று வினவ..

யானை எங்களை எல்லாம் பிடிச்சி வெச்சிட்டு ஐயா..! இப்ப தான் விட்டிச்சி என்று சொல்லிக்கொண்டே நடந்தார்கள்..

யார விடனும், யார விடக்கூடாது என காவலருக்கும் தெரிந்திருக்கும் போல.. எங்கள் கூட்டத்தில் என்னை தவிர மற்றவர்கள் எல்லாரும் பக்தர்கள், என்னை எப்படி காவலர் முதல் தடவையிலேயே உள்ளே செல்ல அனுமதி தந்தார் என இன்னும் ஆச்சரியமாகவே இருக்கிறது..

மீண்டும் ஒரு மாதிரியாக ஏற்கனவே பிரசாதம் வைத்து கும்பிட்ட இடத்துக்கு வந்து பார்க்கிறோம் சட்டி நிறைய வைத்திருந்த அவலை காணவில்லை. சட்டியும் ஒரு பக்கம் விழுந்து கிடந்தது. நடந்ததை புரிந்து கொள்ள நிறைய நேரம் எடுக்கவில்லை காவலுக்கு நின்ற யானை தான் வேலையை காட்டி விட்டது.

கடவுளுக்கு பிரசாதம் எனும் பெயரில் எமக்கு விரும்பியதை படைத்து விட்டு நாமே அதை எடுத்து மீண்டும் சாப்பிட்டு விடுவோம். அதே நிலமை தான் இங்கும் இருக்கும் என எதிர்பார்த்தேன்.. பிறகென்ன பிள்ளையார் யானை உருவத்தில் வந்து பிரசாதத்தினை ஏற்றுக்கொண்டார் என சொல்லிக்கொண்டே பாதுகாப்பாக எம்மை கூடிக்கொண்டு சென்று திரும்ப கொண்டுவந்து விட்ட அதிகாரிக்கு நன்றி கூறிவிட்டு குமுக்கன் ஆற்றை கடக்க தயாரானோம்.

எப்படியோ வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் உதவியால் உள்ளே சென்று பார்த்து விட்டு திரும்பி விட்டோம். ஆற்றை கடந்தும் வந்தாச்சி.. இனி வந்த களைப்பு எங்காவது உறங்குவோம் என கொண்டு வந்த படங்கு ஒன்றை விரிக்கும் போது ஒரு சத்தம் கேட்கிறது இரவு சாப்பாட்டுக்கு பாண், வாழைப்பழம், சீனிச்சம்பல் மற்றும் ஜாம் என்பன இருக்கிறது. அனைவரும் சாப்பிட தயாராகுங்கள் என்று.

ஏற்கனவே சோறு சமைத்துச் சாப்பிடுவது தான் திட்டம் பிறகு இந்த இருட்டுக்குள் எங்கு சென்று விறகு தேடுவது.. அத்தோடு சமைத்து முடியவும் நேரம் எடுக்கும். அனைவருக்கும் களைப்பும் பசியுமாக இருக்குது. பாணையே சாப்பிடுவோம் என முடிவெடுக்கப்பட்டது.

கொண்டு வந்த 12 ராத்தல் பாணையும் அனைவரும் பகிர்ந்து சாப்பிட்டு விட்டு காலை 4 மணிக்குள் எழும்பி பொங்கல் வைக்க தயாராக வேண்டும் என கூறியபடியே சாப்பிட விரித்த படங்கை சற்று விரித்து போட்டோம்.

19 பேரும் நித்திரை கொள்ள கொண்டு வந்த படங்கு போதவில்லை அதனால் சிலர் டிராக்டர் பெட்டியினுள்ளும் சிலர் விரித்த படங்கிலும் படுத்துகொண்டு இருக்கிறோம்.

அருகில் கபிலித்தை காவல் தெய்வமான வீரபாகு தேவருக்கு பூசை நடக்க தொடங்குகிறது.. நேரம் இரவு 9.30 மணியை தாண்டியிருக்கும் எம்மை போல பக்தர்கள் பலர் கூடாரம் அடித்து எமக்கு அருகில் தங்கியிருந்தனர்.

டிராக்டர் பெட்டியில் நாளை அபிஷேகத்திற்காக நாம் கொண்டு வந்த பழங்களின் வாசனை எமக்கு மூக்கை துளைத்துகொண்டு வந்தது காட்டு மிருகங்களின் நுகர்வு திறன் மனிதரை விட பல மடங்கு மேலானது. அதிலும் யானையின் மோப்ப சக்தி பற்றி நான் சொல்ல தேவையில்லை. நடப்பது நடக்கட்டும் நான் படுக்கிறேன் என சொல்லிக்கொண்டு முகத்தினை வேட்டியால் மூடிக்கொண்டு படுகிறேன். அருகில் குகன் டாக்டர் கந்த சஷ்டி கவசம் படித்துக் கொண்டிருக்கிறார், மற்றப்பக்கம் காரைதீவு கோகுலரஞ்சன் அண்ணா அரைகுறை நித்திரையில் தூங்கிக் கொண்டிருக்கிறார்.

ஏதும் நடந்தால் இவர்கள் நம்மை எழுப்புவார்கள் என்று நம்பிக்கையோடு நானும் கண்ணை மூடி தூங்கினேன். கண்ணை மூடியதும் கந்த சஷ்டி கவசமும் மற்றப் பக்கம் வீரவாகு தேவருக்கு நடக்கும் பூஜையின் சத்தமும் தான் கேட்டுக்கொண்டிருந்தது.

வீரபாகு தேவருக்கு சிங்களத்திலேயே பூஜைகள் நடைபெறும். இதற்காக பூசாரிகள் அருகில் இருக்கும் ஊரான கொட்டியாகலைலிருந்தே வருவிற்கப்படுகிறார்கள்.

காவியம் போன்ற ஒன்றை அண்ணளவாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அந்த பூசாரி சிங்களத்தில் பாடிக் கொண்டிருக்கிறார் கொஞ்ச நேரத்தில் அவருக்கு உருவெறுகிறது. அவர் நன்றாக தலைமுடி வளர்த்திருந்தார் தற்போது உருவெறியதும். தலையை சுழற்றிக் கொண்டே சிங்கள காவியத்தை உச்சரித்துக் கொண்டிருக்கிறார்..

அரண்ட நித்திரையில் நடப்பதை நாமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அது நேரம் ஆற்றங்கரையை நோக்கி சிலர் டார்ச் வெளிச்சத்தை அடிப்பதை காணக்கூடியதாக இருந்தது. இந்த நேரத்தில் யாருடா வெளிச்சம் அடிச்சு விளையாடுகிறது. யானை வருகிறதோ என நக்கலாக கதைத்துக் கொண்டே தலைமாட்டில் இருந்த டார்ச் லைட்டை எடுத்து நாமும் அடித்து பார்க்கும்போதுதான் தெரிந்தது உண்மையிலேயே யானை ஒன்று குமுக்கன் கரையில் நீர் அருந்திக் கொண்டிருக்கிறது.

அதனை டார்ச் அடித்து தொல்லை பண்ண வேண்டாம் என்ன அனைவருக்கும் எச்சரிக்கப்பட்டது. அத்துடன் நாமும் டார்ச் அடிப்பதை நிறுத்திவிட்டு, நிலவொளியில் தெரியும் அசைவை மட்டும் மறு கரையில் இருந்து அவதானித்துக் கொண்டிருந்தோம்.

அனைவரது கவனமும் ஆற்றில் நிற்கும் யானையை நோக்கியபடியே இருந்தது. இங்கே இந்தச் சம்பவம் நடக்கும்போது இதற்கு சமாந்தரமான நேரத்தில் பத்தினி அம்மன் கோவில் அருகே உள்ள வலியால் வந்த பெரிய காட்டு பன்றி ஒன்று எமக்கு பின்னால் சத்தமின்றி வந்து நின்றது. டிராக்டர் சாரதிகளும் பக்தர்கள் சிலருமாக இணைந்து பன்றியை வேறு திசைக்கு விரட்டி விட்டனர். எனினும் வேறு ஏதும் மிருகங்களின் தொல்லை ஏற்படலாம் என்பதால் வந்திருந்த சாரதிகள் அனைவரும் இணைந்து இரவு தூங்காமல் காவலுக்கு இருந்தனர்.

இதனை குழப்பம் நடந்தாலும் வீரபாகு தேவருக்கு பூசைக்கு தடங்கல் ஏற்படவில்லை. நேரமோ 11 மணி இருக்கும் ஆற்றில் மீண்டும் டார்ச் அடிப்பது தெரிகிறது. இந்த முறை கொஞ்சம் யானை முன்னேறி ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள மேடான இடத்தில் நின்று நாம் இருந்த திசையாக பார்த்துக்கொண்டிருந்தது.

அனைவருக்கும் பயம் பிடித்து விட்டது. இந்த யானை எந்தப்பக்கத்தால் வந்து கரையேறும் என கணிக்க முடியவில்லை. ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவே குறைந்தது 6 மணி நேரம் எடுக்கும். மீண்டும் ஒருவர் “டார்ச் அடிக்காதீர்கள்” சிங்களத்தில் பலமாக எச்சரித்து கொண்டு செல்கிறார்.

வீரபாகு தேவருக்கு முன்னால் நின்று பாடிகொண்டிருந்த பூசாரி அங்கே அருகில் இருந்தவர்களை ஒரு கையில் பிடித்து அவர்களுக்கு தெய்வாவாக்கு சொல்லிக்கொண்டு மறு கையில் தீப்பந்தம் ஒன்றினால் உடம்பில் பிடிப்பதும், பின்னர் அதை அவரது தலையில் வைப்பதும், பின்னர் மற்றக்கையில் பிடித்திருக்கும் பக்தர்களுக்கு தீயினால் ஆசிர்வத்திப்பது போன்ற வித்தியாசமான செயல்களை செய்துகொண்டிருக்கிறார்.

இதனை பார்த்துகொண்டு இருப்பவர்களுக்கு யோசனை யானை வந்து விடுமோ!

இல்லை

இந்த பூசாரி பக்தர்கள் தலையில் தீ வைத்து விடுவாரோ!!!

யானை மெதுவாக வேறு திசைக்கு நடந்து செல்வது தெரிகிறது. பின்னர் திடீரென காணாமல் போய் விட்டது. வேகமாக நடந்து தூர சென்றிருக்கும் என நாம் அனைவரும் கதைத்துக்கொண்டே பின்னல் திரும்பி பார்க்கும் போது அந்த யானை எம் பின்னல் நின்றுகொண்டிருந்தது.

அந்த நிமிடம் எப்படி இருந்திருக்கும் என வார்த்தையால் விபரிக்க இயலாது. அதனது கண்கள் மட்டும் செம்மஞ்சள் நிறத்தில் கறுப்பு கலந்தது போல தெரிந்தது மற்றும்படி ஒரு உயரமான கறுப்பு உருவம் தான். அனைவருக்கும் பயத்தின் உச்சகட்டம்.

அனைவரும் நித்திரையில் இருந்து எழுந்து விட்டார்கள். டிராக்டர் சாரதிகள் நாம் கொண்டுவந்த பழங்களை எடுத்து யானைக்கு கொடுக்கிறார்கள். சாப்பிட்டுக்கொண்டு இன்னும் வேண்டும் என கேட்பது போலவே பார்த்துக்கொண்டிருந்தது. 15 நிமிடத்துக்கு மேலாக சாப்பிடுவதும், இன்னும் வேணும் என்று கேட்பதுவுமாக நேரம் போக போக இனி கொடுத்து கட்டாது விரட்டி விடுவதை தவிர வழி இல்லை என கூறி வாகனங்கள் அனைத்தும் தமது எஞ்சின்களை இயக்கி சத்தத்தினை உண்டாகி கடைசியில் யானையை பத்தினி அம்மன் கோவிலுக்கு பின்னல் உள்ள காட்டுக்கு விரட்டி விட்டார்கள்.

மீண்டும் டிராக்டர் சாரதிகள் காவலுக்கு இருக்க மற்றவர்கள் அனைவரும் நித்திரைக்கு சென்று விட்டோம். அதிகாலை 1.30 மணி அளவில் தான் வீரபாகு தேவருக்கு பூசை முடிந்ததாக அறியக்கிடைத்தது. அவ்வளவு நேரமும் அந்த பூசரியார் வாக்கு சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார் என்பது ஆச்சரியம் தான்.

பின்னர் காலை 3 மணிக்கு முன்னேஸ்வரம் சண்முகநாதன் ஐயா வந்து “எழும்புங்க சாமி” என்று அனைவரையும் தட்டி எழுப்பிக்கொன்டு வருகிறார். அப்போதுதான் கொஞ்ச நேரத்துக்கு முதல் நித்திரைக்குச் சென்றோம் “இவர் என்ன இப்படி இவ்வளவு நேரத்தோடு வந்து எழுப்புகிறார்” அப்படி இப்படி என்று கத்திக்கொண்டு அனைவரும் ஒரு மாதிரியாக எழும்பிவிட்டனர்.

எழும்பி பார்க்கும் போது தான் தெரிந்தது எமது குழு மட்டும் தான் கடைசியாக எழும்பியவர்கள் என்று.. மற்றைய அனைவரும் குளித்துவிட்டு பொங்கல் வைக்க தயாராகி விட்டனர்.

அவசர அவசரமாக குமுக்கன் ஆற்றில் குளித்துவிட்டு, நாமும் பொங்கல் வைக்கத் தயார் ஆனோம். பொங்கல் வைக்கும் பொறுப்பை மட்டக்களப்பு ரஞ்சித் அண்ணா, கிறிசான்,விக்னேஷ் மற்றும் இன்னும் ஒரு கொழும்பிலிருந்து வந்த நண்பர் ஒருவருமாக எடுத்து செய்து முடித்தனர்.

மற்றையவர்கள் பிரசாதத்திற்கு அவல் தயாரிப்பதிலும், அபிஷேகத்துக்கு தேவையான பழங்களை வெட்டுவதிலும் கவனமாக இருந்தனர் காலை 6 மணி ஆகும் போது அனைத்து வேலைகளும் முடிந்து.

ஆற்றை கடந்து சென்று புனித வனத்தில் நாம் பிரசாதம் வைத்து முதல் நாள் வணங்கிய இடத்தின் நடுவே இருந்த கல்லாலான முருகன் சிலையை ஆற்றங்கரை ஓரம் வைத்து அபிசேகம் பண்ணியபின்னர் மீண்டும் சிலை இருந்த இடத்துக்கே கொண்டு வைத்துவிட்டு வணங்கினோம்.

வணங்கும் போது காலையில் செய்த பிரசாதமான அவலையும், பொங்கலையும், பழங்களையும் படைத்தோம்.

பின்னர் அவசரப்படாமல் மீண்டும் அந்த புனிதமான புளியமரத்தை நோக்கிய பயணம் தொடர்ந்தது.

நேற்று அந்த இடத்தில் அந்த நேரத்தில் நமது குழுவினர் மட்டுமே இருந்தனர் ஆனால் இன்று அங்கு வந்திருந்த அனைவரும் புளியமரத்தை சூழ அமர்ந்திருந்தனர்.

அந்த இடத்தில் ஒலி எழுப்பக் கூடாது என்றமையால் அனைவரும் அமைதியாக கண்ணை மூடி தியானித்து கொண்டிருந்தனர். அந்த இடத்தில் பிரசாதங்கள் படைப்பதற்கோ மாலைகள் இடுவதற்கோ அனுமதியில்லை.

ஏதேனும் உணவுப் பொருட்களின் வாசனை அடித்தால் யானைகள் இங்கே வந்து தங்கி விடும் என காவலுக்கு நின்ற அதிகாரிகள் கூறினார்கள்.

பத்து நிமிடத்துக்கு மேலாக அவ்விடத்தில் இருந்து விட்டு மீண்டும் குமுக்கன் ஆற்றை நோக்கி நடக்கலானோம்.

வரும் வழியில் சிலைகள் அதிகமாக இருந்த இடத்தில் ஒரு பெண் யானை ஆக்ரோஷமாக நின்று கொண்டிருந்தது. தனது தலையிலும் உடம்பிலும் கீழே இருந்த மண்ணை வாரி போட்டுக் கொண்டே மக்கள் இருந்த பகுதி நோக்கி மெதுவாக வந்து கொண்டிருந்தது.

வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அந்த யானையை கட்டுப்படுத்தி ஒரு இடத்தில் நிற்குமாறு யானைக்கு கட்டளையிட்டு பக்தர்களுக்கும் பாதுகாப்பு கொடுத்தனர்.

அப்போது நேற்றிரவு நாம் நித்திரை செய்யும்போது அந்த யானையும் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தது இரண்டு யானைகளும் ஒன்றாக சேர்ந்து கொண்டன. நாம் கையில் வைத்திருந்த அவலை ஒரு பக்கமாக வைத்து விட்டு விலகி வந்து நின்றோம். அவை அவல் இருக்கும் இடத்தை சுலபமாக கண்டுபிடித்து இரண்டும் ஒன்றாக சேர்ந்து அந்த அவலை பகிர்ந்து உண்ண ஆரம்பித்தன.

இரு யானைகளுக்கும் உணவளித்த மகிழ்ச்சியில் கொண்டு சென்ற பாத்திரங்களையும் தூக்கிக் கொண்டு மீண்டும் டிராக்டர் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.

மீண்டும் வீடு நோக்கிப் புறப்பட அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்படுகின்றன. போகும்போது குடிக்க நீர் இல்லை என்பதனால் ஆற்றிலிருந்து பூவல் மூலம் இருக்கின்ற போத்தல்களில் எல்லாம் நீர் நிரப்பப்பி எடுத்துக்கொண்டு டிராக்டர் சாரதி வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம்.

நேரமோ பத்து முப்பது ஆகிவிட்டது, எங்கே இவர்களைக் காணவில்லை எனப் பார்க்கும்போது வீரபாகு தேவருக்கு முன்னால் நின்று வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். வணங்குகிறார்கள் என்று சொல்வதை விட மண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

பயணம் எவ்வளவு கஷ்டமானது என்பது நமக்குத் தெரியும் அத்தனை கஷ்டங்களிலிருந்தும் பாதுகாத்து அனைவரையும் பாதுகாப்பாக கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே அவர்களது நோக்கமாக இருந்தது.

அவர்கள் காசுக்காக வாகனம் ஓடுவது போல் தெரியவில்லை ஒரு தொண்டாகவே இந்தத் தொழிலை செய்து வருகிறார்கள்.

அரோகரா சத்தம் முழங்க இரு டாக்டர்களும் கொட்டியாகல நோக்கி நிதானமாக புறப்பட்டது.

பிற்பகல் 3.30 மணி அளவில் சந்தனவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.அங்கேயே அனைவரும் மத்திய சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு அவரவர் வீட்டிற்கு விரைந்ததோம்.

கண்டதையும், கேட்டதையும், ஆராய்ந்ததையும் வைத்து எனக்கு தனிப்பட்ட முறையில் சரியாக இருக்கும் என தோன்றியவற்றினை பயணக்குறிப்பாக தொகுக்கிறேன் பிழைகள் இருப்பின் திருத்தியமைக்க உதவவும்.

அடுத்த பயணத்தில் சந்திப்போம்..

- #மட்டுநகர்_திவா

இது முகப்புத்தகத்தில் 2020 இல் எழுதிய பயணக்கட்டுரையின் மீள்பதிவு. மூல பதிவை பார்க்க கீழே உள்ள இணைப்புகளை பயன்படுத்தவும்.

கபிலித்தை புனித பயணம் பகுதி I
கபிலித்தை புனித பயணம் பகுதி I I
கபிலித்தை புனித பயணம் பகுதி I I I