படிவெட்டின மலை

இன்றைய எமது பயணம் ஏறாவூர்பற்று மலைகளில் ஒன்றான படிவெட்டின மலை நோக்கியதாக தொடங்கியது. காலை 9 மணிக்கு ஹரிக்ஸன் வீட்டிலிருந்து அஞ்சனனும் நானும் ஒரே மோட்டார் சைக்கிளிலும் ஹரிக்ஸன் தனியானதொரு மோட்டார்சைக்கிளில் மட்டக்களப்பு பேருந்து டிப்போ சந்தி ஊடாக பிள்ளையாரடியை சென்றடைந்தோம். 

 

அங்கே நிகோஷன் அண்ணாவும் பிறேம் அண்ணாவும் எம்முடன் இணைந்துகொண்டனர். அனைவரும் பிள்ளையார் வழிபாட்டுடன் ஏறாவூரில் காலை சாப்பாட்டினையும் வாங்கிக்கொண்டு  வந்தாறுமூலை அம்பலத்தடியில் உள்ள உழவர் சிலை இருக்கும் வீதியின் ஊடாக சிவத்தப்பாலம் தாண்டி மயிலத்தமடு துறையை சென்றடைந்தோம்.

 

 

கடந்த முறை மயில்தங்கின மலை பயனபதிவில் மயிலத்தமடு துறை பற்றியதொரு முன்னோட்டம் பார்த்திருபோம். அதே நிலைமை தான் இன்றும் இருந்தது ஆனால் அன்றைய நிலைமையை விட இன்று ஆற்றில் நீர் மட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. எனினும் தோனி மிதக்கும் அளவுக்கு நீர் போதாமையால் மக்கள் குடியிருப்பு (கொளணி) வழியாக யானை வேலிக்கு கீழாய் மோட்டார் சைக்கிள்களை சரித்து புகுத்தி எடுத்து சற்று ஆழம் குறைந்த பகுதி ஊடாக ஆற்றினை கடக்க தயாராகினோம்.

மயிலவெட்டுவான் துறை

யானை வேலியில் இருந்து ஆற்றுக்கு செல்லும் ஒற்றையடிப்பாதை மிகவும் சரிவானதுடன் வளைவுகளுடனும் இருந்தது. இரு பக்கமும் பிரம்பு செடிகளால் நிரம்பிய பெரும் பற்றை அது. சிறிது தடுமாறினாலும் பிரம்பில் உள்ள முட்கள் எம்மை பதம்பார்த்துவிடும். போதாக்குறைக்கு அந்த சரிவுநிலம் களி போன்ற தன்மையுடையதனால் அதிகாலையில் பெய்த மழையினால் பாதை மிகவும் வழுக்கும் தன்மையுடையதாக மாறியிருந்தது.  

 

மோட்டார்சைக்கிளில் முன் பக்க பிரேக்கும் எனக்கு இல்லை. பாதையை பார்த்தவுடனே சாகசம் செய்ய தயார் நிலைக்கு மாறினோம் யோசிக்க நேரமில்லை வேகமா கீழே இறங்கிக்கொண்டு இருக்கிறோம்.

 

ஒற்றையடிப்பாதை வளைவில் முதியவர் ஒருவர் சைக்கிளை தள்ளியபடி சிரித்துக்கொண்டு நின்றார். சரி இருவரினதும் நிலைமை இனி கவலைக்கிடம் தான் என நினைக்கும் போதே அவர் சைக்கிளை சற்று சரித்துப்பிடித்தபடியே வழிவிட்டார். அதிர்ச்சியில் இருந்து மீளமுன்னரே அனைவரும் பாதுகாப்பாக ஆற்றின் கரையை வந்தடைந்தோம் இவ்வளவும் வெறும் 20 வினாடியில் நடந்தது முடிந்தது.

 

 

இந்த ஆறு மேலிருந்து பார்த்தால் சம மட்டத்தில் ஓடுவதுபோலவே இருக்கும். அதனுள் இறங்கிய பிறகு தான் மேடு பள்ளம் மற்றும் புதைநிலங்கள் இருப்பது தெரிய வரும். அதனால் ஊர்க்காரர் எவரேனும் ஆற்றை கடக்கும் வரை காத்திருந்தோம். ஒருவர் சைக்கிளில் வந்தார் சற்று நடுப்பகுதிக்கு சென்றதும் கொஞ்சம் மேலாக சைக்கிளை தூக்கிக்கொண்டு நடந்தார் நீர் மட்டம் முழங்காலை தாண்டவில்லை. 

 

அவர் சென்ற பாதையினூடே நானும் மோட்டார் சைக்கிளில் சென்றேன். நடுப்பகுதியில் ஒரு மேடான இடம் இருந்தது  அது வரை பிரச்சினை இல்லாமல் வந்துவிட்டேன். அந்த மேட்டிலிருந்து நான் மோட்டார்சைக்கிளை நீருக்குள் இறக்கிய இடம் சற்று ஆழமானது போல எஞ்சின் மட்டத்திற்கு நீரினுள் தாழ்ந்தது தெரிந்ததும் “அஞ்சனன் கெதியா வந்து தள்ளுடா” என்று கத்தியது தான் ஞாபகம் எஞ்சின் நின்று நீர் சைலன்சரினுள் புகுந்து விட்டது. சரி இனியென்ன கொண்டாட்டம் தான். கஷ்டப்பட்டு மோட்டார்சைக்கிளை கரையேற்றினோம்.

படர்கல் மலைப்பயணம் வாசித்தவர்களுக்கு தெரியும் நீருக்கும் எனது மோட்டார் சைக்கிளுக்கும் ஆகாது என்பது. இன்றும் அதே தான் நடந்தது கரையில் வைத்து எஞ்சினை இயக்க பல முயற்சிகள் செய்தும் கைகூடவில்லை. 

 

இந்த கரையில் இருந்து வீதிக்கு செல்ல ஆற்றங்கரைக்கு எவ்வளவு சரிவான பாதையில் இறங்கினோமோ அதைவிட 2 மடங்கு ஏற்றம் ஏற வேண்டி இருந்தது. அஞ்சனனும் நானும் மோட்டார்சைக்கிளை வேகமாக தள்ளியபடி ஏற்றத்தை கடந்துகொண்டிருந்தோம். சற்று சமவெளி வந்ததும் சற்று இளைப்பாறிவிட்டு 15 நிமிட முயற்சியின் பின்னர் மோட்டார்சைக்கிள் எஞ்சின் மீண்டும் வழமையான நிலைக்கு திரும்பியது.

 

நாங்கள் தெரிந்தோ தெரியாமலோ மிகப்பெரும் ஏற்றத்தில் மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்த போது ஏறியிருந்த நீர் எல்லாம் வடிந்ததோடி விட்டது. மிகுதி 15  நிமிட போராட்டமும் ஆங்காங்கே ஒட்டிக்கொண்டு இருந்த நீர் காய்வதற்கு தான். எதோ இந்த அளவோடு பிரச்சினை முடிந்ததை எண்ணி சந்தோசத்துடன் வாச்சிரவெட்டை – கடைசிமலை வீதி ஊடாக வழிப்போக்கர்களிடம் படிவெட்டின மலைக்கு வழி கேட்டபடியே பயணம் கொளுத்தும் வெயிலில் தொடர்ந்தது.

 

இப்போது நானும் ஹரிக்சனும் எனது மோட்டார் சைக்கிளில் பயணிக்கிறோம். எமது தோள்பையில் தான் இரவிரஇரவாக குளிரேற்றி ஐஸ்கட்டியாக மாற்றிய தண்ணீர் போத்தல் இருக்கிறது. கொஞ்ச நேரத்துக்கு ஒரு முறை அதில் கரைந்து சேரும் நீரினை அனைவரும் கொஞ்சம் கொஞ்சம் குடித்து தாகத்தை குறைத்துக்கொள்வோம். 

 

அங்கு இங்கென அலைந்து காட்டு பாதையில் இருந்து ஒருவாறு ஈரளக்குளம் பகுதிக்கு வந்துவிட்டோம். இங்கே மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்தது பாடசாலை, வைத்தியசாலை, கோயில்கள் என மக்கள் செறிந்து வாழும் பகுதிக்கான அனைத்து விடயங்களையும் காணக்கூடியதாக இருந்தது. ஆனால் இன்னும் முழுமையாக எமக்கு யாரும் வழி சொல்லவில்லை. 

நாங்கள் புதியவர்கள் என்பதால் பலர் வழி சொல்ல பயப்பிடுவார்கள், சிலர் வேறு ஏதும் திசையை காட்டி போகச்சொல்வார்கள், மிகச் சொற்பமானவர்களே சரியான வழியினையும் சொல்லி அங்கெ இருக்கும் பிரச்சனைகளை எதிகொள்ளும் வழிகளையும் கூறுவார்கள். 

 

பொதுவாக அனைவரும் சொன்ன பதில் “பாலம் கழிய வாற ஆட்டு பண்ணைக்கு பின்னால இருக்கிற மலை தான் படிவெட்டின மலை ” வேறு வழி இல்லை ஆட்டு பண்ணையை தேடிக்கொண்டே பயணம் தொடர்ந்தது.

வீதியோரம் வேப்பமரத்தடியில் லாவாணை குமாரர் கோயில் பெயர்ப்பலகை தென்பட்டது அதனை புகைப்படம் எடுக்க வேப்பம் மரத்தடியில் மோட்டார் சைக்கிளை நிப்பாட்டி இறங்கினோம். அங்கெ வந்த வழிப்போக்கர் ஒருவரிடம் விசாரித்த போது நாம் நிற்கும் பிரதான வீதியில் இருந்து காட்டு பகுதியில் 50 மீற்றர் தொலைவில் தான் குமாரர் கோவில் இருப்பதாக சொன்னார். நீண்ட நாட்களாக அனைவரும் கேள்விப்பட்ட  பெயர்தான் இந்த லாவாணை குமாரர். சந்தர்ப்பத்தை தவற விடக்கூடாது குமாரர் கோவிலுக்குள் சென்றுவிட்டோம்.

சுற்ற வர முள் வேலி அமைக்கப்பட்டிருந்தது இருந்து அனால் அது மிகவும் தொய்வான நிலைமையில் இருந்தமையால் வேலியை கடந்து கோவிலுக்குள் இலகுவாக செல்லக் கூடியதாக இருந்தது. 

 

குரங்குகளின் அட்டகாசம் அதிகமாக இருக்கும் இடம் அது, அநேகமான பூசைப்பொருட்கள் கீழே விழுந்துகிடந்தன. புதிய முறையில் கட்டப்பட்ட கோயில் போன்று காட்சியளித்தாலும் மிகவும் பழைமையான கோவில் என்பது மட்டக்களப்பாருக்கு தெரியும். 

 

பரிவாரங்கள் யாவுமே கிராமிய சிறு தெய்வங்களாகவே காணப்பட்டது. முக்கியமாக வேடுவ மக்களின் முக்கிய தெய்வங்களுள் ஒன்றான உத்தியாக்களையையும் மற்றும் மாப்பாணர் , வைரவர் போன்றவற்றையும்  காணக்கூடியதாக இருந்தது. 

 

நிழல் நிறைந்த மரங்களுடன் கூடிய அமைதியான இடம் சடங்கு காலங்களில் போனால் பல புதுமைகளை காணலாம் என நம்புகிறேன். நேரம் 12 இனை தாண்டி இருக்கும் பசிக்க தொடக்கி விட்டது. 

 

இந்த காட்டில் எங்கே சாப்பாட்டுக்  கடையை தேடுவது மக்கள் இருக்கும் ஊரினை தாண்டி வந்து நிறைய நேரம்  விட்டது. பசியில் குடிக்க கொண்டு வந்த நீரெல்லாம் குடித்து முடித்தாயிற்று. 

 

பிறேம் அண்ணா அந்த நேரத்தில் புச்சி கச்சான் ஒரு பிடி தந்தார் அது தான் நீண்ட நேரத்தின் பின் சாப்பிட்டதொரு உணவு.

வரும் வழியில் ஒரு கோயிலில் சிலர் நின்றுகொண்டு இருந்ததாகவும் அந்த கோயிலில் இருந்து புகை வந்ததாகவும் ஹரிக்ஸன் கூறினான். பசியில் இருந்த எமக்கு இந்த தகவல் கேட்டகணமே அந்த கோவிலுக்கு சென்றால் கட்டாயம் பொங்கல் கிடைக்கும் என்று நம்பிக்கை வந்து விட்டது. சரி கோயிலுக்கு போய் பாப்போம் என சொல்வதற்குள் அஞ்சனன் மோட்டார் சைக்கிளினை அந்த புகைவந்த கோயில் இருந்த பக்கம் நகர்த்தத் தொடக்கி விட்டான்.

இது ஒரு காளி அம்மன் கோயில் நாங்கள் போய் பார்க்கும் போது புகை ஏதும் வரவில்லை. சரி சமைத்து முடிந்திருக்கும் பூசை முடிவதற்குள் உள்ளே செல்ல வேண்டும் எனும் ஒரே நோக்கத்தில் கோவிலருகே சென்று விட்டோம். ஆனால் அங்கு சில சிறுமிகளை தவிர யாரும் இல்லை. 

 

அவர்கள் தான் அங்கே  குப்பைகளுக்கு தீ வைத்திருக்கிறார்கள். அந்த புகை தான் வீதியால் செல்லும் போது எமக்கு தெரிந்ததென அங்கெ பாதி எரிந்த நிலையில் இருந்த குப்பைகளை கண்டு  கணநேரத்தில் உணர்ந்துகொண்டோம். சரி சாப்பாடு தான் இல்லை. குடிக்க தண்ணீராவது இருந்தால் தான் இந்த வெயிலில் தாக்குபிடிக்கலாம். சிறுமிகளிடம் “குடிக்க தண்ணீர் எங்கே எடுப்பீங்க” என்று கேட்க அவர்களும் கோவிலுக்கு பின்னால் உள்ள ஒரு தண்ணீர் குழாயினை காட்டினர். 

 

அங்கே முகம் கழுவி நீரும் அருந்திவிட்டு போத்தல்களிலும் நிரப்பிக்கொண்டு வந்ததும் அருகே இருந்த பெரியதொரு மரச்சோலையின் கீழே சிறிய மலை குன்றின் மீது இருந்த அகோர முகத்துடன் காட்சியளிக்கும் பெரியதொரு காளி அம்மனின் சிலை தெரிந்தது கொஞ்ச நேரம் பிரமித்து போய்விட்டோம். 

 

 

சிவப்பு,கருப்பு,வெள்ளை மற்றும் செம்மஞ்சள் நிறங்களின் கலவையயும்  பார்த்தவுடனே பயத்தினை உண்டாகும் தோற்றமும் அதற்கும் மேலாக சிவப்பு நிற பின்னணி ஒளி அமைப்புகளுமென சிலையை செய்தவர்கள் அகோரத்தின் எல்லையிலேயே கொண்டு நிறுத்தி விட்டார்கள்.

காளியம்மனையும் குன்றின் அடியில் இருந்த சிவலிங்கத்தையும் வணங்கிவிட்டு மீண்டும் வீதியை பிரதான வீதிக்கு வரும் போது இலங்கை போக்குவரத்துசபை பஸ் ஒன்று அந்த இடத்துக்கு வந்தது. அதில் செங்கலடி – ஈரளக்குளம் என பெயர்ப்பலகை பொறிக்கப்பட்டிருந்தது.

 

நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு ஆற்றினை கடந்து வந்தோம் பஸ் வரும் பாதை எது என தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தது. அதற்கேற்றாப்போல் பஸ்ஸும் எங்கள் அருகாமையில் வந்து நின்றது. 

 

நாங்கள் நின்றுகொண்டு இருந்த இடம் தான் அந்த பஸ் திருப்பும் இடமாம். பஸ்ஸின் நடத்துனரிடம் நீங்கள் எந்த வழியால் இந்த இடத்துக்கு வந்தீர்கள் என கேட்டோம். அவரும் “கிரான் சந்தி வழியாக இங்கே வர முடியும் எனவும், இந்த இடத்துக்கு அப்பால் மக்கள் இல்லை என்பதால் இந்த காளி கோவிலடியிலேயே பஸ்சினை திருப்புகிறோம்” என கூறினார்.

 

நாமும் அடுத்த முறை அந்த பாதையால் வருவோம் என கூறிக்கொண்டு. குமாரர் கோயில் இருந்த இடமெல்லாம் தாண்டி சற்று தூரம் பிரதானபாதை ஊடாக பயணிக்கும் போதே பாலம் ஒன்று வந்தது. பாலத்தை தாண்டி 2 நிமிட தொலைவில் ஆட்டு பண்ணையும் வந்தது. ஆட்டுப்பண்ணையில் உள்ளவர்களிடம் கேட்டால் படிவெட்டின மலைக்கு அவர்களே வழி சொல்வார்கள் என எமக்கு கூறப்பட்டது. 

 

நாம் ஆட்டு பண்ணையினுள் சென்று பார்த்த போது யாருமே அங்கு இல்லை. ஆடுகள் மட்டும் தான் இருந்தது. மீண்டும் அங்கு வந்த வழிப்போக்கரிடம் மலைக்கு வழி கேட்டோம். அவரும் ஆட்டு பண்ணைக்கு பின்னல் இருக்கும் சிறு காட்டினை கைகாட்டி இந்த காட்டினை கடந்தால் நீங்கள் கேட்ட மலை வரும் என வழி காட்ட நாமும் அவர் சொன்ன வழியில் பயணிக்கலானோம்.

அந்த வழி ஆட்டுப்பண்ணை வேலிக்கு அருகாகவே சென்றது அப்போது சிலர் லொறி ஒன்றில் வத்தவப்பழம் ஏற்றிக்கொண்டு இருப்பது தெரிந்தது. அனைவருக்கும் பசி அவர்களிடம் வத்தவப்பழம் வாங்கி சாப்பிடுவோம் என கூறிக்கொண்டு மோட்டார் சைக்கிளை பாதையிலேயே வைத்துவிட்டு. சற்று தூரம் யானை வேலிகளை கடந்து நடக்க தொடங்கினோம். பன்றிகளுக்கு சுருக்கு வைத்திருந்தார்கள் நல்ல வேளை சற்று அவதானமாக சென்றோம் இல்லையேல் எம் காலில் மாட்டியிருக்கும். 

 

லொறியில் வத்தவப்பழம் ஏற்றிக்கொண்டிருந்தவர்களிடம் விசாரித்த போது தம்புள்ள மொத்த விற்பனை நிலையங்களுக்காக வந்து கொள்வனவு செய்வதாக சிங்களத்தில் கூறினார்கள். அவர்களுடன் கதைத்துக்கொண்டிருக்கும் போதே தோட்டக்காரர் 2 பெரிய பழங்களை சாப்பிட தந்தார். 

 

பழத்தை வெட்ட கத்தி எம்மிடம் இருக்கவில்லை பிறேம் அண்ணாவின் காலாவதியான ATM அட்டை ஒன்றினால் வெட்டி சாப்பிட்டோம். தற்காலிகமாக பசி அடங்கி விட்டது.

சற்று இளைப்பாறிவிட்டு தோட்டக்காரர்களிடம் விசாரிக்கும் போது காட்டினூடாக சென்றால் கட்டாயம் யானைகளை சந்திக்க வேண்டி இருக்கும். நீங்கள் வரும் போது கடந்து வந்த பாலத்தின் அருகே ஒரு பெரிய விளா மரம் இருக்கிறது அதன் கீழே மோட்டார் சைக்கிளை வந்தது விட்டு அதிலேயே நின்று பாருங்கள் ஒரு சிறிய மலை தெரியும் அது தான் நீங்கள் போக வேண்டிய மலை. அது தான் இலகுவான பாதை என சொல்லி எம்மை மீண்டும் பாலம் இருந்த பக்கத்துக்கு பிரதான வீதியால் செல்லுமாறு எம்மை வழிநடத்தி அனுப்பினர். 

 

 

வீட்டுக்கு கொண்டு போய் சாப்பிட 10 வத்தவப்பழங்களையும் வாங்கினோம். 1000 ரூபாய் போதும் என கூறினார்கள். ஒரு கிலோ பழம் 90 ரூபாய்க்கு கொடுப்பதாக தான் கதைத்துக்கொண்டு இருந்தனர் ஆனால் எமக்கு 12 பழங்களை 1000 க்கு தந்தனர். ஒரு பழம் குறைந்தது 2 கிலோ என்றாலும் வரும். நட்டம் தான் எனினும் தரும் மனமிருந்தது அவர்களுக்கு. பழ மூட்டையுடன் வந்து கொண்டு இருக்கும் போது வழியில் மாடு மேய்க்க சென்ற சிறுவன் ஒருவனை சுகநலம் விசாரித்துக்கொண்டே சென்றோம். 

 

 

நாமும் பாலத்தருகே இருக்கும் விளா மரத்தடியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பழ மூட்டையை அருகே இருந்த பற்றைக்குள் ஒழித்து வைத்தோம். அப்போது நிகோஷ் அண்ணா “இங்க யாரும் சாப்பாட்டை களவெடுக்க மாட்டாங்க வெளியிலேயே வைத்துவிட்டு வாங்க என கூறினார்”  ஓவ்வொரு இடங்களிலும் மக்கள் வித்தியாசமாக தான் இருக்கிறார்கள். அங்கே மிருகங்களிடம் இருந்து பாதுகாக்க தான் வேலி மனிதர்களிடம் இருந்து மனிதர்களை பாதுகாக்க அவர்கள் அங்கே முயற்சிக்கவில்லை.

 

ஆட்டுப்பண்ணையிலும் சிறிய ஆடு தொடக்கம் பெரிய ஆடுகள் வரை வெளி நபர்களிடம் இருந்து எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல் தான் இருக்கின்றன. நாம் வழி கேட்க சென்ற போது ஆட்டுக்குட்டி ஒன்றை தூக்கிக்கொண்டு வந்திருந்தால் கூட அவர்களுக்கு தெரிந்திருக்காது. எல்லாமே ஒரு நம்பிக்கையில் தான் சுழன்றுகொண்டிருக்கிறது. என கதைத்துக்கொண்டே மலையை நோக்கி நடக்கவும் நாம் சுகம் விசாரித்த சிறுவன் காட்டு வழியாக மாட்டினை தேடிக்கொண்டு படிவெட்டின மலைக்கு வரவும் நேரம் சரியாக இருந்தது. பின்னர் அவனது வழிகாட்டலில் 5 நிமிட வேகமான நடை தூரத்தில் படிவெட்டின மலையை சென்றடைந்தோம்.

பழ மூட்டையில் வித்தியாசமான வகை வத்தவப்பழம் 2 இருந்தது அதனை ஹரிக்சனின் தோள்பையினுள் வைத்து மலைக்கு எடுத்துக்கொண்டு தான் வந்தோம். அதனையும் மர நிழலில் அமர்ந்து வழிகாட்டிய சிறுவனுடன் பகிர்ந்து உண்டோம். இனி மலையை சுற்றிப்பார்ப்போம். புதையல் வேட்டைக்காரர்கள் புதையலை எடுப்பதோடு மட்டுமல்லாது பண்டைய ஆதாரங்களையும் உடைத்து அழிக்கிறார்கள். 3 இடங்களில் புதையல் எடுத்த குழிகள் இருந்தது. அந்த 3 இடங்களிலும் பாம்பு புற்றும் இருந்தது.


இந்த மலை பற்றிய தகவல்களை  சி. பத்மநாதன் எழுதிய “இலங்கை தமிழர் வரலாறு” புத்தகத்தில் பக்கம் 106 இல் பார்க்கக்கூடியதாக இருக்கும். சமதரை பிரதேசத்தில் இருப்பதால் வயல்வெளிகளை அவதானிக்க இலகுவான இடம் இந்த மலை. சூட்டினை தடுக்க மலையில் மண்ணை கொட்டி மரங்கள் வளர்த்துள்ளனர். 

 

மயிலவட்டவான் ஆறு மற்றும் லாவாணை ஆறுகள் அருகில் இருப்பதால் இதை சூழவுள்ள இடங்கள் மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். கற்தூண்கள், தூண் தங்கு கற்கள், கல்லறை மூடிகள், உருண்டையான பெருங்கற்கள், கலவோடுகள், செங்கல் கட்டிகள் மற்றும் ஓடுகளும் காணக்கிடைக்கின்றன. 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டுகளும் இங்கே உள்ளது. அதில் வேள்ணாகன், வேள் கண்ணன், மணிணாகன்,  மணிணாகன் பள்ளி எனும் சொற்கள் இருப்பதால் இந்த பண்பாட்டு சின்னங்கள் நாகரின் இருப்பிடம் என்பதை உறுதிப்படுத்தி கூறலாம்.

 

 

வேள் எனும் குறுநில மன்னன்(நாகர்) இங்கே அரண் அமைத்து வாழ்ந்திருக்கலாம். பகைவர்களிடம் இருந்து தம்மை பாதுகாக்கவும், மந்தைகளை கண்காணிக்கவும் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான மேய்ச்சல் நிலங்கள், இலை குழைகள் கிடைத்தமையும் மலைகளில் தங்களின் வதிவிடங்களை அமைத்துக்கொள்ள காரணாமாக இருந்திருக்கும். 

 

மாடு மேய்க்கும் சிறுவன் மாடுகளை காணவில்லை என்றதும் அவன் உடனடியாக மலைக்கு தான் வந்தான். நாகர்களின் பழக்கம் தலைமுறைகள் கடந்தும் அச் சிறுவனுக்கு புகட்டப்பட்டிருக்கலாம் என எண்ணத்தோணியது அந்த கணத்தில்.

குறுநில மன்னர்களின் மாளிகைகள், வீடுகள் மற்றும் கோயில்கள் செங்கல்லினால் அமைக்கப்பட்டது.  இந்தப் படிவெட்டின மலையிலும் செங்கல்லினாலான இடிபாடுகள் காணப்படுகிறது. மட்கலன்களின் சிதைவுகளும் சட்டி, பானை, குடம், வட்டில் (உண்கலம்) போன்றவற்றின் சிதைவுகளை காணக்கிடைத்தது. அவை கரும் – செம் பாண்டங்களாக இருப்பதால் பெருங்கற்காலப்பண்பாட்டுக்குரியதாகும். சமகாலத்துக்குரிய சிவப்பு நிற கலவோடுகளையும் காணக்கூடியதாக இருந்தது.

 

வற்றாத நீர்த்தேக்கங்களை நீரூற்றின் போக்கினை அறிந்து உருவாக்கக்கூடியவர்கள் நாகர்கள். மலையினை வெட்டி உருவாக்கப்பட்ட  நீர்த்தேக்கம்  ஒன்றினை இங்கும் காணலாம். 

 

புகைப்படங்கள் எடுத்துவிட்டு அங்கேயே சற்று நேரம் இளைப்பாறிவிட்டு  மாவடியோடை  பக்கமாக சென்று இழுபடிச்சேனை சந்தி வழியாக செங்கலடிக்கு வந்து சேர்ந்தோம் பசி அதிகமாக இருந்தது ஆனால் நேரமோ 4 மணியை தாண்டி இருந்தது ஏறாவூரில் சாப்பாட்டு கடைகளை பார்த்தோம் ஒரு இடத்திலும் அந்த நேரத்தில் மத்திய சாப்பாடு கிடைக்கவில்லை. பசியுடன் மீண்டும் மட்டக்களப்புக்கு வந்து சேர்ந்தோம்.

 

அடுத்த பயணத்தில் சந்திப்போம்…

 


மட்டுநகர் திவா

 

16/04/2023